ALAM SEKITAR & CUACASELANGOR

குடும்பத்தின் தேவையை ஈடுசெய்வதில் மலிவு விற்பனை பேருதவி- குடும்ப மாது பெருமிதம்

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 5- தங்களைப் போன்ற குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் சுமையைக் குறைப்பதில் மாநில அரசின் மலிவு விற்பனை பெரிதும் உதவுவதாக ஜெலாஜா ஏசான் ராக்யாட் விற்பனையில் 15 முறை கலந்து கொண்ட குடும்ப மாது ஒருவர் தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் கீழ் விற்கப்படும் பொருள்கள் மலிவாக உள்ள காரணத்தால் கோழி, இறைச்சி போன்ற உணவுகளை பிள்ளைகளுக்கு சமைத்து தர முடிகிறது என்று நோர் மோனலிசா நோர்டின் (வயது 46) கூறினார்.

ஏழு பிள்ளைகளை வளர்ப்பது என்பது சவால் மிக்கதாக உள்ளது. ஓட்டுநராக வேலை செய்யும் கணவரின் சம்பளம் அதிகம் கிடையாது. சில வேளைகளில் நாங்கள் கஞ்சி அல்லது நாசி கோரோங்கை மட்டுமே உணவாக உட்கொண்டு உள்ளோம் என்றார் அவர்.

இந்த மலிவு விற்பனைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகுதான் கோழி, இறைச்சி போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்ற முடிகிறது. அதே சமயம் எங்களின் பொருளாதாரச் சுமையையும் குறைக்க முடிந்துள்ளது என்றார் அவர்.

இவ்வட்டார மக்களின் பொருளாதார சுமையை குறைப்பதில் இந்த மலிவு விற்பனை திட்டம் பெரிதும் துணை புரிந்துள்ளதாக தாமான் சுபாங் பாரு ருக்குன் தெத்தாங்கா தலைவரான ஃபூஸி முகமது யூசுப் (வது 61) கூறினார்.

குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினரின் சுமையைக் குறைக்க கூடிய இந்த திட்டம் மிகவும் பயன்மிக்கதாக விளங்குவதோடு இது தொடரப்பட வேண்டும் என்பது எனது விருப்பமாகும் என அவர் மேலும் சொன்னார்.

அரசாங்கம் எந்த திட்டத்தை அமல்படுத்தினாலும் அது மக்களுக்கு பயன் தரக்கூடியதாக இருக்க வேண்டும் என்பது முக்கியமாகும் என்றார் அவர்.


Pengarang :