இளைஞர்களை கவரும் நிகழ்ச்சிகளை அதிகளவில் நடத்த மாநில அரசு திட்டம்

ஷா ஆலம், ஜூன் 5- இளைஞர்களை கவரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யும் திட்டத்தை சிலாங்கூர் அரசு கொண்டுள்ளதாக இளைஞர் மேம்பாட்டு துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்.

சிலாங்கூர் மாநில அரசு மற்றும் மீடியா பிரிமா பெர்ஹாட் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்படும் ஜோம் ஹேபோ விழாவுக்கு கிடைத்த அமோக ஆதரவைக்  கருத்தில் கொண்டு மாநில அரசு இந்த திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

வாய்ப்பு கிட்டும் பட்சத்தில் மேலும் அதிக நிகழ்வுகளை வெகு விமரிசையாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்வோம் என அவர் தெரிவித்தார்.

அடுத்த வாரம் சுமார் 3,000 மின்-அழைப்பு வாடகை காரோட்டிகளை ஒன்று திரட்டி அவர்களுக்கு தலா 500 வெள்ளி உதவித் தொகை வழங்க விருக்கிறோம். அதனுடன் ஓட்டப்பந்தய நிகழ்வு வேலைவாய்ப்புச் சந்தை உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

சிலாங்கூர் மாநில அரசை தொடர்ந்து ஆதரித்து வரும் சிலாங்கூர் மக்களின் நலனுக்காக இந்த திட்டங்கள் அமல்படுத்தப்படுகிறது  என்று இங்குள்ள ஷா ஆலம் அரங்க விழா சதுக்கத்தில் நடைபெற்ற ஜோம் ஹேபோ நிகழ்வில் உரையாற்றிய போது அவர்  தெரிவித்தார்.

முதன் முறையாக நடத்தப்பட்ட இந்த ஜோம் ஹேபோ நிகழ்வை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னதாக அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.


Pengarang :