SELANGOR

வணிகப் பகுதிகளில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கும் பணி தொடரும் – சுபாங் ஜெயா நகராண்மை கழகம்

சுபாங் ஜெயா, ஜூன் 7: சுபாங் ஜெயா நகராண்மை கழகம், வணிக பகுதிகளில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கும் பணி இனிவரும் காலங்களில் தொடரும் என்கிறது.

வடிகால்களை மூடும் அளவுக்கு உரிமையாளர்கள் அல்லது குத்தகைதாரர்களால் கட்டப்படும் கட்டமைப்புகள் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என அதன் கார்ப்பரேட் மற்றும் மூலோபாய மேலாண்மை இயக்குனர் முஹம்மது அஸ்லி மிஸ்வான் கூறினார்.

SS15 மற்றும் USJ1 உள்ளிட்ட பல பகுதிகளில் சட்டவிரோத கட்டுமானங்கள் குறித்து நாங்கள் கண்டறிந்துள்ளோம். இந்த வணிகப் பகுதி கட்டிடத்தின் உரிமையாளர் அல்லது குத்தகைதாரர் தண்ணீர் ஓட்டத்தைச் சீர் குலைக்கும் அளவுக்குச் சட்டவிரோதமாகக் கட்டிடங்கள் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இச்செயலால், குறிப்பாக மழை நேரங்களில் நிலைமை மோசமாகி விடுவதை நாங்கள் விரும்பவில்லை.

SS13 அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சட்டவிரோதக் கட்டிடங்களை இடிக்கும் நடவடிக்கைக்குப் பிறகு, “எம்பிஎஸ்ஜே, குடியிருப்பு பகுதிகளில் மட்டும் இல்லாமல் குடியிருப்பாளர்களுக்கு இடையூறு விளைவிக்கும் மற்றும் அரசாங்க நிலத்தில் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அனைத்து பகுதிகளிலும் கவனம் செலுத்த உள்ளது,” என்று அவர் கூறினார்.

எம்பிஎஸ்ஜே எந்த தரப்பு உடனும் சமரசம் செய்து கொள்ளவில்லை என்றும், பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.

“எம்பிஎஸ்ஜே நடவடிக்கை எடுப்பதில் வெளிப்படையானது, ஆனால் அதற்கு கால அவகாசம் தேவைப்படும், ஏனெனில் சிலர் அமலாக்க நடவடிக்கையிலிருந்து மறைத்து தவறு செய்கிறார்கள்,” என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :