NATIONAL

நகை வாங்க வந்தவர் போல் நாடகமாடி வளையல்களுடன் தப்பிய நிறைமாதக் கர்ப்பிணி போலீசில் சிக்கினார்

ஆராவ், ஜூன் 9- இங்குள்ள நகைக்கடை ஒன்றில் 45,000 வெள்ளி
மதிப்புள்ள இரு தங்க வளையல்களைத் திருடிய சந்தேகத்தின் பேரில்
ஒன்பது மாதக் கர்ப்பிணி மற்றும் அவரின் வளர்ப்பு சகோதரியைப் போலீசார்
கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பெக்கான் ஆராவில் உள்ள நகைக்கடை ஊழியர்
ஒருவர் நேற்று முன்தினம் மாலை 5.52 மணியளவில் செய்த புகாரின்
அடிப்படையில் அவ்விருவரும் கைது செய்யப்பட்டதாக ஆராவ் மாவட்ட
போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அகமது மோஷின் முகமது ரோடி
கூறினார்.

சம்பவ தினத்தன்று நகைக்கடைக்கு வந்த அந்த கர்ப்பிணி பெண்
தாம் நகைகளை வாங்க விரும்புவதாகக் விற்பனை முகவரிடம்
கூறியுள்ளார். கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டிருந்த இரு தங்க
வளையல்களைக் காட்டி அவற்றை தம்மிடம் காட்டும்படி கோரியுள்ளார்.

சுமார் பத்து நிமிடங்கள் அந்த வளையல்களை பார்த்துக் கொண்டிருந்த
அந்த மாது திடீரென அந்த வளையல்களுடன் அங்கிருந்து ஓட்டம்
பிடித்துள்ளார் என அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த நகைகளை தாம் திருடியது
உண்மை என்றும் கடைக்கு வெளியே மோட்டார் சைக்கிளில் காத்திருந்த
36 வயதான தனது வளர்ப்பு சகோதரியுடன் தாம் அங்கிருந்து
தப்பியதாகவும் அப்பெண் கூறியுள்ளார் என அவர் குறிப்பிட்டார்.

சம்பவ இடத்தில் மாநிலப் போலீஸ் தலைமையகத்தின் தடயவியல் பிரிவு
மேற்கொண்ட சோதனையில் அந்த 29 வயது பெண்ணின் கைரேகைகள்
அங்கு பதிவாகியுள்ளது கண்டறியப்பட்டது என்றார் அவர்.

கட்டிடத்தின் உள்ளே கொள்ளையிட்டது தொடர்பில் குற்றவியல்
சட்டத்தின் 380வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :