NATIONAL

குழந்தை விற்பனைக் கும்பலுடன் தொடர்பு- ஜே.பி.என். அதிகாரிகள் உள்பட பலர் கைது

புத்ரா ஜெயா, ஜூன் 9- குழந்தை விற்பனைக் கும்பலுடன்
தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தங்கள் அதிகாரிகள்
இருவர் உள்பட பலரைக் கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் ஊழல் தடுப்பு
ஆணையம் (எம்.ஏ.சி.சி.) கைது செய்துள்ளதை தேசியப் பதிவுத் துறை
(ஜே.பி.என்.) நேற்று உறுதிப்படுத்தியது.

பிறப்புப் பத்திரம் மற்றும் மைகிட் வெளியிடும் கும்பலுடன்
தொடர்புடையவர்கள் என் சந்தேகத்தின் பேரில் இரு ஜே.பி.என்.
அதிகாரிகளை எம்.ஏ.சி.சி. கைது செய்துள்ளதாகத் தேசியப் பதிவுத் துறையின்
தலைமை இயக்குநர் ஜம்ரி மிஸ்மான் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

எம்.ஏ.சி.சி. மற்றும் ஜே.பி.என். இடையிலான விவேக ஒத்துழைப்பின்
வாயிலாகத் தங்களுக்குக் கிடைத்த உளவுத் தகவல்களை ஜே.பி.என்.
எம்.ஏ,சி.சி.யிடம் பகிர்ந்து கொண்டதாகவும் இதன் மூலம் அந்த கைது
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் அவ்வறிக்கையில்
குறிப்பட்டார்.

இந்த விசாரணை முழுமை பெறுவதற்கு ஏதுவாக தேவையான அனைத்து
வித ஒத்துழைப்பையும் தமது தரப்பு எம்.ஏ.சி.சி.க்கு வழங்கும் என்றும்
அவர் சொன்னார்.

அடையாள ஆவணங்களைச் சட்டவிரோதமான முறையில் வெளியிடும்
நடவடிக்கைக்குத் துணை போவதாகச் சந்தேகிக்கப்படும் தனது அதிகாரிகள்
மற்றும் பணியாளர்கள் விஷயத்தில் ஜே.பி.என். ஒருபோதும் விட்டுக்
கொடுக்கும் போக்கை கடைபிடிக்காது என்றும் அவர் திட்டவட்டமாகத்
தெரிவித்தார்.

குழந்தை விற்பனை கும்பலில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்
பேரில் மருத்துவ நிபுணர், ஜே.பி.என். அதிகாரிகள் உள்பட பலரை ஜே.பி.என். கைது செய்துள்ளதாக ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன.


Pengarang :