SELANGOR

ஸ்ரீமூடா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் சமூகப் பணிகளுக்குச் சமய, சமூக அமைப்புகள் நிதியுதவி

ஷா ஆலம், ஜூன் 8- சமய வளர்ச்சியையும் சமூக வளர்ச்சியையும் இரு
கண்களாக கருதி செயல்பட்டு வரும் தாமான் ஸ்ரீமூடா, ஸ்ரீ மகா
மாரியம்மன் ஆலயத்தின் அளப்பரிய அறப்பணி சுற்றுவட்டார சமய
மற்றும் சமூக அமைப்புகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.

மதத்தின் மாண்பைக் கட்டி காப்பதை கடமையாகவும் கல்வி, கலை,
கலாசாரத்தைப் பேணிக் காப்பதை வேள்வியாகவும் கருதி செயல்பட்டு
வரும் இந்த ஆலயத்திற்கு தோள் கொடுத்த துணை நிற்க அந்த
அமைப்புகள் முன்வந்துள்ளன.

இவ்வாலயத்தின் சமூகப் பணிகளுக்கு உதவும் நோக்கில் கோத்தா
கெமுனிங், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய நிர்வாகம் 3,000 வெள்ளியும்
மலேசிய இந்து அர்ச்சகர் சங்க சிலாங்கூர் மாநில கிளை 1,000 வெள்ளியும்
நன்கொடையாக வழங்கியுள்ளதாக ஆலயத்தின் துணைத் தலைவர்
எம்.சுகுமாறன் கூறினார்.

வட்டார இந்துக்களின் கல்வி, கலாசாரம் மற்றும் சமூகவியல்
மேம்பாட்டிற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.

அர்ச்சனைச் சீட்டுகள் வழி கிடைக்கும் வருமானத்தில் 10 விழுக்காட்டுத்
தொகையை இவ்வட்டாரத்திலுள்ள இரு தமிழப் பள்ளிகளின் கல்வி
மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டிற்கு வழங்கும் திட்டத்தை இந்த
ஆலயம் நீண்ட காலமாக அமல்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

தமிழ்ப் பள்ளிகளுக்கான இந்த உதவித் திட்டத்தை கடந்த எட்டு
ஆண்டுகளாக நாங்கள் அமல்படுத்தி வருகிறோம். இந்த நிதியிலிருந்து
10,000 வெள்ளியை ஷா ஆலம் சுங்கை ரெங்கம் தமிழ்ப் பள்ளியின் மாநாட்டு
மைய நிர்மாணிப்புக்கும் 3,000 வெள்ளியை கெமுனிங் உத்தாமா, எமரால்ட்
தோட்ட தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வாங்குவதற்கும்
தாங்கள் வழங்கியதாக அவர் சொன்னார்.


Pengarang :