SELANGOR

இலவசக் குடிநீர் திட்டத்தில் பொது மக்களைப் பதிவு செய்ய புக்கிட் லஞ்சான் தொகுதி நடவடிக்கை

ஷா ஆலம், ஜூன் 10- மாநில அரசின் இலவசக் குடிநீர்த் திட்டத்தில் பொது
மக்களைப் பதிவு செய்வதற்காகப் புக்கிட் லஞ்சான் தொகுதி பல்வேறு
இடங்களில் களப்பணியாற்றி வருகிறது.

இந்த பதிவு நடவடிக்கைக்குப் பொது மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு
கிடைத்து வருவதோடு பண்டார் ஸ்ரீ டாமன்சாரா, தாமான் ஏசான், தாமான்
பிடாரா, கெப்போங் ஆகிய இடங்களில் நடமாடும் பதிவு நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எலிசபெத்
வோங் கூறினார்.

இந்த இலவசக் குடிநீர்த் திட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலானோர்
பதிவு செய்துள்ள இடங்களில் அண்மைய சில வாரங்களாக
முகப்பிடங்களை அமைத்துள்ளோம். இது வரை 1,500க்கும் மேற்பட்ட
விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த நடமாடும் முகப்பிடங்கள் மூலம் இத்திட்டத்திற்குப் பதிவு செய்யும்
போது எழக்கூடிய பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்படுவதாக
அவர் தெரிவித்தார்.

இந்த இலவசக் குடிநீர்த் திட்டம் குறித்து பலர் இன்னும்
அறிந்திருக்கவில்லை. இந்த திட்டத்தில் பதிவு செய்ய விரும்புவோர்
அடையாளக் கார்டு மற்றும் குடிநீர்க் கட்டண பில் ஆகியவற்றைக்
கொண்டு வந்தால் போதுமானது என்றார் அவர்.

மாதம் 5,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறும் தரப்பிரை
இலக்காகக் கொண்டு இந்த இலவசக் குடிநீர்த் திட்டம்
அமல்படுத்தப்பட்டுள்ளது.


Pengarang :