ECONOMYMEDIA STATEMENT

மடாணி அரசாங்கத்தில்  கல்வி வழி இந்தியச் சமுதாயத்தின் எதிர்காலம்

ஷா ஆலம், ஜூன்  10 ;- இன்று ஷா ஆலம்  கன்வென்சன்  சென்டரில் பிற்பகல் 2.30 மணிக்கு  மடாணி அரசாங்கத்தில்  கல்வி வழி இந்தியச் சமுதாயத்தின் எதிர்காலம்  என்ற மித்ரா ஏற்பாட்டிலான அரங்கில் கலந்து கொள்ள  பிரதமர்  டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  வருகை புரிந்தார்.

இந்த நிகழ்வில் பெருவாரியான இந்தியர்கள் குறிப்பாகக் கெ அடிலான்,  ம.இ.க மற்றும் ஜ.செ.க  கட்சிகளைச் சேர்ந்தவர்கள்  கலந்து கொண்டனர்.  சிலாங்கூர்  மற்றும்  ஐந்து மாநிலத் தேர்தலுக்கு  முன்  இந்தியர்கள்  ஒன்று கூடியிருப்பது  வரும் தேர்தலுக்கான  ஒரு முன்னேற்பாடு எனக் கருதப்படுகிறது.

அதே வேளையில், அரசியல் தளங்களில்  இந்தியர்களின் எதிர்காலம் மற்றும் தேவைகள் குறித்து,  இந்திய அரசியல் கட்சிகள்  குரல் எழுப்புவதுடன்  நிற்காமல் காரியமாற்ற முன் வர வேண்டும்.  இன்று  இந்தியர்கள் மீது  பரிவு  கொண்ட டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  பிரதமராகத்  தலைமை ஏற்று  இருப்பதால்  இந்தியர்களின்  எதிர்பார்ப்புகள்  அதிகமாக இருப்பதாக  இந்த நிகழ்வுக்கு  வருகை புரிந்த மக்கள்  கருத்து கூறினர்.

இந்த நிகழ்வில் மித்ரா தலைவரும் சுங்கை பூலோக் நாடாளுமன்ற  உறுப்பினருமான ரமணன் , கல்வி அமைச்சர் பாட்லினா சீடேக் , மித்ராவின் தலைமை இயக்குநர் இரவிந்திரன் நாயர்,  கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர்  சார்லஸ் சந்தியாகோ, ம. இ.க  தேசியத் தலைவர் விக்னேஸ்வரன்  போன்ற பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதில்  திறப்பு உரை  நிகழ்த்திய   மித்ராவின் தலைமை நிர்வாக அதிகாரி  இரவிந்திரன் நாயர் இப்பொழுது மித்ரா இந்தியச் சமுதாயத்திற்கு  ஆறு முக்கியத் திட்டங்களை முன்னெடுத்திருப்பது குறித்து விவரித்தார். இத்திட்டங்களில் பங்கெடுக்க  இந்தியர்கள் இணையத்தின்  வழி மனு செய்யலாம் என்றார்.

இந்த  நிகழ்வில்   வரவேற்புரை நிகழ்த்திய டத்தோ ரமணன் தமிழ்ப்பள்ளி விவகாரம், தாய்மொழிக்கல்வி,  குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக்  கொண்ட தமிழ்ப் பள்ளிகளின் எதிர்காலம்  குறித்தும்  பேசினார்.


Pengarang :