கோலசிலாங்கூர், செப் 21: இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 93,534 பேருடன் ஒப்பிடுகையில் 27 சதவீதம் அதிகரித்து 118,920 ஆக உள்ளது.
போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இளைஞர்களாக இருப்பது மிகவும் கவலைக்குரியதாக உள்ளது என தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு ஏஜென்சியின் (AADK) இயக்குநர் ஜெனரல் சுதெக்னோ அஹ்மட் பெலோன் கூறினார்.
“கடந்த ஆண்டு 137,000 க்கும் மேற்பட்ட போதைக்கு அடிமையானவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும் மொத்த போதை பித்தர்கள் 65 சதவீதம் இளைஞர்கள் மற்றும் இளம் வயதினரை உள்ளடக்கியது” என்று அவர் நேற்று இரவு தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு ஏஜென்சியின் ஊடக பாராட்டு விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
கடந்த ஐந்தாண்டுகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் துஷ்பிரயோகம் செய்யும் போக்கின் அடிப்படையில், ஆர்கானிக் மருந்துகளை விட செயற்கை மருந்துகளின் பயன்பாடு அதிகமாக இருப்பதாக அவர் கூறினார்.
இதற்கிடையில், அதிக விகிதத்தைப் பதிவு செய்த மாநிலங்களில் பெர்லிஸ், கெடா, கிளந்தான் மற்றும் திரெங்கானு ஆகியவை அடங்கும் என்று சுதெக்னோ தெரிவித்தார்.
அதே நேரத்தில் சிலாங்கூர் அதிக எண்ணிக்கையிலான போதை பித்தர்களைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. “இளைஞர்கள் ஓய்வு நேரங்களில் பயனுள்ள நடவடிக்கைகளில் ஈடுபடுவது உறுதி செய்வதற்காக இந்த ஆண்டு போதைப்பொருள் தடுப்புப் பிரிவை நாங்கள் தொடங்கினோம்.
“அடுத்த அரை ஆண்டில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் ஒரு மில்லியன் உறுப்பினர்களைச் சேர்ப்பதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம். இதுவரை 120,000 உறுப்பினர்களை நாங்கள் பெற்றுள்ளோம்,” என்று அவர் கூறினார்.
போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களை மறைக்க வேண்டாம் என்றும், சிகிச்சைக்காகத் தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு ஏஜென்சிக்கு வருமாறும் சுதெக்னோ பெற்றோருக்கு அறிவுறுத்தினார்.
“குணப்படுத்துவதை விட தடுப்பு சிறந்தது, அது வீட்டிலிருந்து தொடங்க வேண்டும் மற்றும் குழந்தைகள் குடும்பத்தால் வழிநடத்தப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.
– பெர்னாமா