நியூயார்க், செப்.21- மலேசியாவும் இலங்கையும் பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த ஒப்புக் கொண்டுள்ளன.
நியூயோர்க்கில் இன்று இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த போது இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப் பட்டதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
“எங்கள் சந்திப்பில், பரஸ்பர நலன்களுக்காக பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த நாங்கள் ஒப்புக் கொண்டோம்,” என்று அவர் சந்திப்புக்குப் பிறகு தனது அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
இதில் உயர்மட்ட, வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகள், கல்வி, சுற்றுலா மற்றும் கலாச்சாரம் மறறும் மனித வள மேம்பாடு, சுற்று பயணம் ஆகியவற்றில் பரிமாற்றம் அடங்கும் என்று அன்வர் கூறினார்.
நிதியமைச்சராக இருக்கும் அன்வார், இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் தற்போதுள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சியில் புதிய ஒத்துழைப்பின் பகுதிகளை ஆராய்வதற்கான வாய்ப்பை வழங்கியது என்றார்.
“இந்த ஒத்துழைப்பு மலேசியா மற்றும் இலங்கை மக்களுக்கு நன்மைகளை கொண்டு வரும் என்று நம்புகிறேன்” என்று அன்வார் கூறினார். விக்கிரமசிங்கவைத் தவிர, பிரதமர் தனது முதல் நாளில் துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் ஈரானிய ஜனாதிபதி செயிட் இப்ராஹிம் ரைசி ஆகியோரையும் சந்தித்தார்.
– பெர்னாமா