பாலிங்கில் வெள்ளம்- 102 பேர் தற்காலிக நிவாரண மையங்களில் தஞ்சம்

அலோஸ்டார், செப் 22- பாலிங் மாவட்டத்தில் நேற்றிரவு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து 33 குடும்பங்களைச் சேர்ந்த 102 பேர் இரு தற்காலிக நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்தனர்.

இஸ்லாஹியா தாவார் பள்ளிவாசல் மற்றும் பிஞ்சுல் லுவார் பள்ளிவாசல் ஆகியவை தற்காலிக நிவாரண மையங்களாக செயல்படுவதாக மலேசிய பொது தற்காப்பு படையின் பேரிடர் மேலாண்மை பிரிவின் தலைவர் மேஜர் முகமது சுஹைமி முகமது ஜைன் கூறினார்.

நேற்றிரவு 11.00 மணியளவில் திறக்கப்பட்ட தாவார் இஸ்லாஹியா பள்ளிவாசலில் 31 குடும்பங்களைச் சேர்ந்த 91 பேர் தங்க வைக்கப்பட்டுள்ள வேளையில் நள்ளிரவு 12.00 மணியளவில் திறக்கப்பட்ட பிஞ்சுல் லுவார் பள்ளிவாசலில் இரு குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் அடைக்கலம் நாடியுள்ளதாக அவர் சொன்னார்.

நேற்று மாலை தொடங்கி பாலிங் வட்டாரத்தில் பெய்த அடைமழை காரணமாக தங்கள் வீடுகளில் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த 33 குடும்பத்தினரும் தற்காலிக நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

பலத்த மழை காரணமாக சுங்கை கெட்டில் ஆற்றில் நீர் பெருக்கெடுத்து கம்போங் பாடாங் எம்போங் மற்றும் கம்போங் ஈபோய் ஆகிய கிராமங்களில் வெள்ளத்தை ஏற்படுத்தியது என்றும் அவர் சொன்னார்.

நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்த அனைவரும் நல்ல உடலாரோக்கியத்தோடு உள்ளதோடு அரசு துறைகள் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை வழங்கி வருவதாக அவர் கூறினார்.


Pengarang :