மலிவு விற்பனைக்கு தொடர்ந்து ஆதரவு- சமையல் எண்ணெய் ஒரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தது

சுபாங் ஜெயா செப் 25 , சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் இன்று
நடைபெற்ற ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனையில் சமையல் எண்ணெய்
உள்ளிட்ட பொருள்கள் ஒரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தன.

சந்தையை விட குறைவான விலையில் விற்கப்படும் காரணத்தால்
முட்டை, அரிசி போன்ற பொருள்களும் விரைவாக விற்றுத் தீர்ந்ததாக
விற்பனைத் திட்ட மேலாளர் முகமது ஷியாமி அஸ்மாவி சலாவுடின்
கூறினார்.

இந்த விற்பனையில் சமையல் எண்ணெய்தான் வெகு விரைவில்
விற்கப்பட்டது. இன்றைய விற்பனையில் ஒரு மணி நேரத்திற்குள் அந்த
சமையல் பொருள் முற்றாகத் தீர்ந்து விட்டது. இதனை அடுத்து முட்டை,
அரிசி ஆகியவை அதிக வரவேறபைப் பெற்ற பொருள்களாக இருந்தன
என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே, தமது தொகுதியில் நடைபெறும் மலிவு விற்பனைகளுக்கு
பொது மக்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு கிடைத்து வருவதாக சுபாங்
ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மிஷல் இங் மேய் ஸி கூறினார்.

வசதி குறைந்த மக்களுக்கு உதவுவதற்கு ஏதுவாக இந்த விற்பனையை
சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் அடிக்கடி நடத்தும் எனத்
தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் சொன்னார்.

இந்த விற்பனையில் பொதுமக்களும் பங்கு பெறுவதற்கு வாய்ப்பு வழங்கிய
சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு நன்றி தெரிவித்துக்
கொள்கிறேன். எந்த விளம்பரமும் செய்யப்படாத போதிலும் பெரும்
எண்ணிக்கையிலானோர் இந்த விற்பனையில் கலந்து கொண்டது எனக்கு
வியப்பை அளிக்கிறது என்றார் அவர்.

வாழ்க்கைச் செலவின அதிகரிப்பால் பெரும் சிரமத்தை
எதிர்நோக்கியிருக்கும் மக்களுக்கு உதவும் நோக்கில் மாநில அரசு

அறிமுகப்படுத்தியுள்ள இந்த மலிவு விற்பனைத் திட்டத்தை தாம் பெரிதும்
வரவேற்பதாக போலீஸ்காரரான நோர் ஏமி மிஸான் (வயது 34) கூறினார்.

அரசு ஊழியர்களாக இருந்தாலும் நாங்களும் பொருள் விலையேற்றத்தால்
பெரும் சிரமத்தை எதிர்நோக்குகிறோம். இத்தகைய மலிவு விற்பனைத்
திட்டத்தை தொடக்கிய மாநில அரசுக்கு நன்றி என அவர் சொன்னார்.


Pengarang :