SELANGOR

பெண்மணியை போலீஸ்காரர் தாக்கும் காணொளி தொடர்பில் காவல் துறை விசாரணை

ஷா ஆலம், செப் 26- பெண்மணி ஒருவரை போலீஸ்காரர் தாக்குவதை
சித்தரிக்கும் காணொளி ஒன்று பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து
ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான விசாரணை அறிக்கையை சிலாங்கூர்
மாநில காவல் துறை திறந்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்ட இச்சம்பவம் தொடர்பான
காணொளி ஒன்று நேற்று தங்களின் கவனத்திற்கு வந்ததாக சிலாங்கூர்
மாநில துணைப் போலீஸ் தலைவர் டத்தோ எஸ். சசிகலாதேவி நேற்று
இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறினார்.

பொதுச் சேவைத் துறை பணியாளர் ஒருவர் பெண்மணியைத்
தாக்குவதைச் சித்தரிக்கும் அந்த சம்பவம் எங்கு, எப்போது நிகழ்ந்தது
என்பது இன்னும் தெரியவில்லை என்று அவர் சொன்னார்.

இந்த காணொளியில் உள்ள அரசாங்க ஊழியர் சிலாங்கூர் மாநில
போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் என்பது காவல்
துறையின் ஆய்வில் தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட அந்த போலீஸ்காரர்
உடலின் ஒரு பகுதி செயலிழந்த நிலையில் தற்போது மருத்துவ விடுப்பில்
இருந்து வருகிறார் என அவர் குறிப்பிட்டார்.

அந்த காணொளி மிகவும் பழையது என்பதும் அது மீண்டும் சமூக
ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதும் தாங்கள் மேற்கொண்ட
விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் யாரும் புகார் செய்யாத நிலையில் சிலாங்கூர்
மாநில காவல் துறை இதன் தொடர்பில் விசாரணை அறிக்கையைத்
திறந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது என்றார் அவர்.


Pengarang :