செமினி, செப் 26: மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவின் ( மித்ரா) சிறப்பு நிதி உலு லங்காட் இந்தியர்களுக்காக அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர், முகமட் சானி ஹம்சான் ஆதரவில் பெறப்பட்டுள்ளதாக காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர் இராமச்சந்திரன் அர்ச்சுனன் கூறினார்.
உலு லங்காட் மாவட்ட இந்தியர்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ள தேவைப்படும் உதவிகளை செய்ய சமூக நல மற்றும் தொண்டூழியக் கலாச்சார சங்கம் உருவாக்கப் பட்டுள்ளதாகவும், அக்கழக்கத்தின் வழி பல திட்டங்களை தயாரித்துள்ளதாக உலு லங்காட் பிகேஆர் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் சானி ஹம்சானின் சிறப்பு அதிகாரியுமான இராஜன் முனுசாமி தெரிவித்ததாக கூறினார்.
மித்ரா மூலம் இந்திய சமூகத்திற்கான இத்தகைய மேம்பாட்டு நிதி ஒதுக்கீடுகள் ஒரு புதிய அணுகுமுறை மட்டுமின்றி சிறந்த முன்னெடுப்பு, இது இந்திய சமூக மேம்பாட்டை வலுப்படுத்தும் என இராஜன் முனுசாமி குறிப்பிட்டார்.
இதனிடையே, உலு லங்காட் உட்பட 72 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் வழங்கப்பட்ட 100,000 வெள்ளி ஒதுக்கீட்டின் வழி இந்திய சமூகத்தினரிடையே பல்வேறு வகையான வளர்ச்சியைக் காண முடியும் என்று இச்சங்கத்தின் செயலாளர் இராமச்சந்திரன் அர்ச்சுனன் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட பரிந்துரையின்படி 8 திட்டங்களை உலு லங்காட் நாடாளுமன்றம் மேற்கொள்ளவிருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு இத்திட்டத்தை அங்கீகரித்து, பரிசீலனை செய்து ஆதரவளித்து மித்ரா டத்தோ ரமணன், முகமட் சானி ஹம்சான், இராஜன் முனுசாமி ஆகியோருக்கு அவர் நன்றியைத் தெரிவித்து கொண்டார் இச்சங்கத்தின் செயலாளர் இராமச்சந்திரன் அர்ச்சுனன்.