SELANGOR

தொழில் முனைவோருக்கு வணிகக் கருவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு – வறுமை ஒழிப்பு திட்டம்

ஷா ஆலம், செப்.26: வறுமை ஒழிப்பு திட்டம் மூலம் சிறு தொழில் முனைவோர்கள் வணிகக் கருவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

குறைந்தபட்சம் ஒரு வருட காலமாக ஒரு தொழிலை நடத்தி வருபவர்கள் RM10,000 வரைக்கான உதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்று மாநில அரசின் செயலாளரின் அலுவலகம் X பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பத்தாரர்கள் மலேசிய குடிமகனாக இருக்க வேண்டும், சிலாங்கூரில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வசிப்பவராக இருக்க வேண்டும் மற்றும் மாதத்திற்கு RM3,000க்கும் குறைவான குடும்ப வருமானம் பெற வேண்டும்.

விண்ணப்பம் தொடர்பான கூடுதல் தகவல்களை selangorpenyayang.com என்ற இணையதளத்தின் மூலம் பெறலாம்.

மாநிலத்திலுள்ள வியாபாரிகள், வர்த்தகர்கள் அல்லது சுயதொழில் செய்பவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட இத்திட்டத்தைத் தொடர சிலாங்கூர் பட்ஜெட் 2023யில் RM2 மில்லியன் ஒதுக்கப்பட்டது.

இந்த திட்டம் 2013இல் செயல்படுத்தப்பட்டதிலிருந்து, மொத்தம் 4,321 சிறு தொழில் முனைவோர் RM21.6 மில்லியன் ஒதுக்கீட்டில் வணிகக் கருவிகளை உதவியாகப் பெற்றுள்ளனர்.


Pengarang :