மலாக்கா, அக் 20- கேம் திரண்டாக், பந்தாய் முத்தியாராவில் நீரில் சிக்கி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றொரு மாணவரும் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார். அந்த மாணவர் கடந்த ஆறு தினங்களாக மலாக்கா மருத்துவமனையில் கோமா நிலையில் இருந்து வந்தார்.
மூளை செயலிப்பு காரணமாக முகமது லுக்மான் அலிஃப் மொக்தார் (வயது 16) என்ற அந்த மாணவர் நேற்றிரவு 10.00 மணியளவில் உயிரிழந்ததாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிறிஸ்டோபர் பாடிட் கூறினார்.
அந்த மாணவர் கடந்த 13ஆம் தேதியன்று மேல் சிகிச்சைக்காக திரண்டாக் முகாமின் அம்புலன்ஸ் வாகனம் மூலம் மலாக்கா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக அவர் சொன்னார்.
அந்த மாணவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்ட நிலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மூளை செயலிழப்புக்கு ஆளான அந்த மாணவர் நேற்று உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
கடந்த 13ஆம் தேதி பந்தாய் முத்தியாரா கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கிய சகாவை காப்பாற்ற முயன்ற போது உயிரிழந்த ஃபாரிஸ் டார்விஷி (வயது 16) என்ற மாணவரின் நெருங்கிய சகாவாக முகமது லுக்மான் விளங்கினார்.
தங்கள் பள்ளியில் போதித்த பயிற்சி ஆசிரியரின் இறுதி பணி தினத்தை கொண்டாடும் வகையில் 14 மாணவர்கள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணியளவில் அந்த கடற்கரைக்கு குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது