ஷா ஆலம், டிச 17- பூச்சோங், தாமான் வாவாசன் 3ல் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புகலிடமளிக்க பூச்சோங், டேவான் லாமான் புத்ரி 3ல் தற்காலிக நிவாரண மையம் திறக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு 9.00 மணியளவில் அந்த தற்காலிக மையம் திறக்கப்பட்ட வேளையில் பாதிக்கப்பட்டவர்களை இடம் மாற்றும் பணிகளை களத்திலுள்ள அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
தேற்று மாலை பெய்த மிகக் கடுமையான மழையின் விளைவாக பூச்சோங் மற்றும் கின்ராராவைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிகழ்ந்த பல பேரிடர் சம்பவங்களைக் கண்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம் .
கின்ராரா மாநில சட்டமன்ற சேவை மையம், சுபாங் ஜெயா மாநகர் மன்ற விரைவு பணிப்படை, மற்றும் மாநகர் மன்ற கவுன்சிலர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ களத்தில் தயாராக உள்ளனர் என்று அவர் முகநூல் பதிவில் தெரிவித்தார்.
தாமான் வாவாசன் 3 இல் ஒரு வீட்டின் முன்புறம் நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்குள்ள ஏழு வரிசை வீடுகளை காலி செய்ய உத்தரவிடப்பட்டதை சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் முன்னதாக உறுதிப்படுத்தியது.
சுமார் 50 மீட்டர் பரப்பளவை உட்படுத்திய இந்த நிலச்சரிவு தொடர்பில் தமது தரப்புக்கு மாலை 7.26 மணியளவில் தகவல் வந்ததாக அதன் இயக்குநர் வான் முகமது ரசாலி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
நிலச்சரிவினால் அவ்வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஹோண்டா காருக்கு சேதம் ஏற்பட்டது, எனினும் உயிருடற்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றார் அவர்.
தாமான் வாவாசன் 3 இல் ஏற்பட்ட நிலச்சரிவுத் தவிர்த்து , தாமான் கின்ராரா 2, ஐ.ஓ.ஐ. மால் பேரங்காடி, பண்டார் கின்ராரா 4 மற்றும் தாமான் பாக் சியோங் ஆகிய இடங்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.