புத்ராஜெயா, டிச 21- இஸ்ரேலிய கப்பல்கள் மலேசியாவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கும் அரசாங்கத்தின் முடிவு அந்நாட்டை மலேசியா அங்கீகரிக்கவில்லை என்பதோடு பொருளாதாரம் உள்பட எந்த துறைகளிலும் அதனுடன் ஒத்துழைக்காது என்பதை உணர்த்தும் சமிக்ஞையாகும் என்று தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.
இஸ்ரேல் சம்பந்தப்பட்ட பல்வேறு விவகாரங்களை வலியுறுத்தி அரசாங்கம் பல ஆண்டுகளாக கடைபிடித்து வரும் கொள்கைக்கேற்ப இந்நடவடிக்கை அமைந்துள்ளது என்று ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளரான அவர் தெரிவித்தார்.
இஸ்ரேலைத் தளமாகக் கொண்ட ஸிம் எனும் நிறுவனத்திற்கு சொந்தமாக கப்பல்கள் நாட்டிலுள்ள எந்த துறைமுகத்திலும் நுழைவதற்கு உடனடித் தடை விதிக்கும் அரசாங்கத்தின் முடிவு, காஸா மக்கள் எதிர்நோக்கி வரும் அவலங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் மலேசியாவின் கடப்பாட்டை பிரதிபலிக்கும் விதமாகவும் அமைந்துள்ளது என அவர் சொன்னார்.
நேற்று இங்கு நடைபெற்ற 2023 மலேசிய சினிமா பாராட்டு நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இஸ்ரேலிய நாட்டுக்குச் சொந்தமான சரக்கு கப்பல்களும் அந்நாட்டை நோக்கிச் செல்லும கப்பல்களும் மலேசியாவிலுள்ள எந்த துறைமுகத்திலும் அணைவதற்கு தடை விதிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று கூறியிருந்தார்.
பாலஸ்தீன மக்களுக்கு எதிராக நிகழ்த்தி வரும் கொடூரத் தாக்குதல்கள் மூலம் அனைத்துலகச் சட்டத்தையும் மனிதாபமான கோட்பாடுகளையும் புறக்கணித்து வரும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.