லுமுட், பிப் 25- திவேட் எனப்படும் தொழில் நுட்ப மற்றும் தொழில்திறன் கல்வியை மேம்படுத்துவதன் மூலம் தேர்ச்சி பெற்ற அந்நிய நாட்டு மனிதவளத்தை சார்ந்திருப்பதை மலேசியா தவிர்க்க இயலும் என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காடீர் கூறினார்.
நாட்டிலுள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழக ஒருங்கமைப்பின் (எம்.டி.யு.என்.) வாயிலாக திவேட் கல்வித் திட்டத்தை மேலும் உயரிய நிலைக்கு விரிவுபடுத்துவது இந்நோக்கத்தின் அடிப்படையில் கடைபிடிக்கப்படும் அணுகுமுறைகளாகும் என்று அவர் சொன்னார்.
மலேசிய பெர்லிஸ் பல்கலைக்கழகம், மலாக்கா மலேசியா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் , மலேசிய துன் ஹூசேன் ஓன் பல்கலைக்கழகம், மற்றும் மலேசிய பகாங் பல்கலைக்கழகம் ஆகியவை எம்.டி.யு.என். ஒருங்கமைப்பின் ன் கீழ் செயல்படும் தொழில்நுட்ப கல்வியை அடிப்படையாக கொண்ட நான்கு உயர்கல்விக் கூடங்களாகும் என அவர் தெரிவித்தார்.
சான்றிதழ் அல்லது டிப்ளோமா வரை பயின்ற திவேட் மாணவர்கள் பி.எச்.டி எனப்படும் முனைவர் பட்டப்படிப்பு வரை கல்வியைத் தொடர்வதற்குரிய வாய்ப்பினை இந்த எம்.டி.யு.என். ஒருங்கமைப்பு வழங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்குள்ள மஞ்சோங் நகராண்மைக் கழக மெர்டேக்கா மண்டபத்தில் நடைபெற்ற லுமுட் தொகுதியிலுள்ள குறைந்த வருமானம் பெறும் பி40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
மீண்டும் பள்ளிக்குத் திரும்புவோம் 2024 எனும் இத்திட்டத்தின் கீழ் இத்தொகுதியிலுள்ள 1,000 மாணவர்களுக்கு பள்ளி உதவி நிதியாக தலா 150 வெள்ளி வழங்கப்பட்டது.