அம்பாங் ஜெயா, பிப் 25- இங்குள்ள மெலாவத்தி மாநாட்டு மையத்தில் நேற்றிரவு நடைபெற்ற கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதி நிலையிலான சீனப்புத்தாண்டு பொது உபசரிப்பில் பல்லின மக்கள் கலந்து சிறப்பித்தனர்.
சீனப் புத்தாண்டின் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரான ஜைனால் அபிடின் அவாங் சிக் (வயது 71) இந்த பொது உபசரிப்பு நிகழ்வுக்கு சீன பாரம்பரிய உடையை அணிந்து வந்திருந்தார்.
பல்லின மக்களை உள்ளடக்கிய இத்தகைய நிகழ்வுகள் இன்றியமையாதவையாக விளங்குகின்றன. பல்லின மற்றும் பல சமய மக்களிடையிலான இடைவெளியை குறைக்க உதவுகின்றன என்று அவர் சொன்னார்.
இதனிடையே, மாநில அரசு மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஏற்பாடு செய்யும் இத்தகைய நிகழ்வுகளை தாம் ஒருபோதும் தவறவிட்டதில்லை என்று தனியார் துறை பணியாளரான ஜி.கவிதா (வயது 32) கூறினார்.
ஒவ்வோராண்டும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இத்தகைய நிகழ்வுகளுக்கு நான் வருகை புரிவது வழக்கம். கடந்த தீபாவளி பொது உபசரிப்பிலும் நாங்கள் கலந்து கொண்டோம். இதுபோன்ற நிகழ்வுகளில பல்லின மக்களை சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்த பொது உசரிப்பில் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் கலந்து கொண்ட முதியவரான கோ கியாட் எங் (வயது 72), சீனப்புத்தாண்டு பொது உபசரிப்பு நிகழ்வில் கலந்து கொள்வது இதுவே முதன் முறையாகும் என்றார்.
மலாய், சீன மற்றும் இந்திய சமூகத்தை உள்ளடக்கிய இத்தகைய நிகழ்வுகள் முஹிபா உணர்வுக்கு புத்துயிரளிக்கும் வகையில் உள்ளன. வரும் காலங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும் என்றார் அவர்.
கோம்பாக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் மந்திரி புசாருமான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையில் நடைபெற்ற இந்த பொது உபசரிப்பு நிகழ்வில் 1,500 பேர் கலந்து கொண்டனர்.