ஷா ஆலம், பிப் 25- வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ்ஜை நேற்று சந்தித்தார்.
அந்த 90 நிமிட சந்திப்பின் போது, மலேசியா உலக நாடுகளால் மதிக்கப்படும் தேசமாக விளங்குவதற்கு ஏதுவாக மலேசியர்கள் ஒற்றுட்டு செயல்படும் அதேவேளையில் பொருளாதாரத்தை மீட்சியுறச் செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று சுல்தான் உத்தரவிட்டதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.
சிலாங்கூர் மாநிலத்தின் சமீபத்திய மேம்பாடுகள் குறித்து சுல்தான் தனது கவலையை வெளிப்படுத்தியதாகவும் ங்கா அந்த அறிக்கையில் குறிப்பிட்டார்.
2023 புதிய தொழிலியல் பெருந்திட்டத்தின் கீழ் கொள்கைளை அமல்படுத்தும் அதேவேளையில் திடக்கழிவுகளை எரிசக்தியாக மாற்றும் ஆலைகளை அமைப்பது, பசுமைப் பொருளாதாரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் சிலாங்கூர் தனது முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருவதாகவும் சுல்தான் தெரிவித்தார் என அவர் சொன்னார்.
கூட்டரசுடன் இணைந்து கழிவுப் பொருள் மேலாண்மையை திறனுடனும், ஆக்ககரமான முறையிலும் நீடித்த வகையிலும் செயல்படுத்துவதற்கு ஏதுவாக 2007ஆம் ஆண்டு திடக்கழிவு மற்றும் பொது துப்புரவு மேலாண்மை சட்டத்தை (சட்டம் 672) அமல்படுத்துவது குறித்து சிலாங்கூர் அரசு பரிசீலித்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
சட்டம் 672ஐ ஏற்றுக் கொள்ள சிலாங்கூர் இணக்கம் தெரிவித்துள்ளதாகக் கூறிய ங்கா, இச்சட்டத்தை ஏற்றுக் கொண்ட எட்டாவது மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது என்றார்.