NATIONAL

வாகனங்களில்  கைவிடப்படும் குழந்தைகளின் மரணங்களைத் தடுக்க பிரச்சார இயக்கம்- சிலாங்கூர் ஏற்பாடு

ஷா ஆலம், பிப் 28 – வாகனங்களில் பல மணிநேரம் கவனக்குறைவாக கைவிடப்படும்  காரணத்தால்  குழந்தைகள் இறக்கும் சம்பவங்கள் அண்மைய காலமாகப் பதிவாகி வருவதைத்  தொடர்ந்து மாநில அரசு அடுத்த மாதம் பாதுகாப்பு இதன் தொடர்பான  பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளது.

வாகனங்களில் குழந்தைகளின் பாதுகாப்புப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான பிரச்சாரத்தை நாங்கள் எதிர்வரும் மார்ச் மாதம்  21 ஆம் தேதி தொடங்குவோம்  என்று  சமூக நலத்துறைக்கான மாநில ஆட்சிக்குழு  குழு உறுப்பினர் அன்பால் சாரி இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 30ஆம் தேதியன்று   ஷா ஆலம் மருத்துவமனையின் பின்புற வாயில்  அருகே நிறுத்தப்பட்டிருந்த தாயின் காரில்  மயங்கிய நிலையில் காணப்பட்ட ஐந்து வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து  மேரு தொகுதி அமானா மேரு  உறுப்பினர் மரியம் அப்துல் ரஷீட் எழுப்பிய துணைக் கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அன்றைய தினம் இரவு 8.01 மணிக்கு மருத்துவமனையிலிருந்த மருத்துவ அதிகாரி மூலம் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக ஷா ஆலம் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம் கூறியிருந்தார்.

மருத்துவமனையில் பணிபுரியும் அக்குழந்தையின் தாய்,  தன் மகளை தற்செயலாகக் காரில் விட்டுச் சென்றது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குழந்தையை மதியம் 2.00 மணியளவில் அருகிலுள்ள குழந்தைகள் காப்பகத்திலிருந்து அழைத்து வந்த அந்த தாய், பின்னர் காரில் தவறுதலாக மறந்து விட்டு வேலைக்குத் திரும்பியுள்ளார்.

கடந்த நவம்பரில் ஆரா டமன்சாராவில் எட்டு மணி நேரம் வாகனத்தில் கைவிடப்பட்ட இரண்டு வயது சிறுமி உயிரிழந்தார். ஒரு மாதத்திற்கு முன்பு இதேபோன்ற சம்பவம் திங்கானுவில் 16 மாத சிறுமிக்கு நேர்ந்தது.

இதற்கிடையில், மரியமின் மூலக் கேள்விக்கு   பதிலளித்த அன்பால், 2023 ஆம் ஆண்டு முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்  தொடர்பான 146 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதை காவல்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன என்றார்.

இதே காலகட்டத்தில்  190 குழந்தைகள்  புறக்கணிப்பு சம்பவங்களும் 146  பலாத்காரம் தொடர்பான சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :