NATIONAL

கெடா, பொக்கோ செனாவில் வெப்ப அலை- பெர்லிஸ் மாநிலத்தில் எச்சரிக்கை நிலை

கோலாலம்பூர், மார்ச் 1- கெடா மாநிலத்தின் பொக்கோ செனா பகுதியில் நேற்று மாலை 4.50 மணி அளவில் வெப்பநிலை இரண்டாம் கட்டத்திற்கு அதாவது வெப்ப அலை ஏற்படும் அளவுக்கு உயர்வு கண்டது.

தொடர்ச்சியாக மூன்று தினங்களுக்கு 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பம் நீடிக்கும் சூழல் வெப்ப அலை என வகைப் படுத்தப் பட்டுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை கூறியது.

எச்சரிக்கை கட்டத்திலான வெப்ப நிலை 21 இடங்களில் பதிவாகியுள்ளதாக அத்துறை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியது.

பெர்லிஸ் மாநிலம் முழுவதும் இந்நிலை நீடிக்கும் நிலையில் கெடா மாநிலத்தின் லங்காவி, கோத்தா ஸ்டார், குபாங் பாசு, பாடாங் தெராப், சிக் யான், பெண்டாங், பாலிங் ஆகிய பகுதிகள் இந்த நிலையை எதிர்கொள்ளும்.

மேலும், பினாங்கு மாநிலத்தின் செபராங் பிறை உத்தாரா, செபராங் பிறை தெங்கா,  தீமோர் லாவுட் ஆகிய பகுதிகளிலும் கடுமையான வெப்ப நிலை பதிவாகும் என அந்த அறிக்கை குறிப்பிட்டது.

இது தவிர, பேராக் மாநிலத்தின் கோல கங்சார், சிலாங்கூர் மாநிலத்தின் சிப்பாங், கோலாலம்பூர், சபா மாநிலத்தின் பியூஃபோர்ட், சரவாக் மாநிலத்தின் லிம்பாங் ஆகியவை கடும் வெப்பத்தை எதிர்கொள்ளும் இதரப் பகுதிகளாகும்.

வடகிழக்கு பருவமழையின் கடைசி கட்டத்தில் மலேசியா உள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை முன்னதாக கூறியிருந்தது. இதனால் தீபகற்ப மலேசியாவின் வட பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்து கடுமையான வெப்பமும் வறட்சி நிலையும் நீடிக்கும் என அது குறிப்பிட்டது.


Pengarang :