ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நோன்புப் பெருநாளை முன்னிட்டு நாடு முழுவதும் 450 இடங்களில் மலிவு விற்பனை

பாப்பார், மார்ச் 10-   இவ்வாண்டு நோன்பு மாதம் முழுவதும் ரஹ்மா விற்பனைத் திட்டத்தை (PJR) நாடு முழுவதும் அட்டவணை அடிப்படையில் 450 இடங்களில் நடத்த  உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு திட்டமிட்டுள்ளது.

மக்களின் வாழ்க்கைச் செலவு குறைத்து  மலிவு  விலையில் அடிப்படைப் பொருள்களை  குறிப்பாக  ரம்ஜான் காலத்தில் வாங்க உதவும் உன்னதமான நோக்கத்தில் இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது என்று அதன் அமைச்சர்  டத்தோ அர்மிசான் முகமது அலி கூறினார்.

அசல் விற்பனை விலையுடன் ஒப்பிடுகையில்  10 முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் அடிப்படைப் பொருள்களை  விற்பனை செய்வதை இந்த ரஹ்மா விற்பனைத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர்  சொன்னார்.

வழக்கம் போல் இந்த விற்பனையில் உலர் அத்தியாவசியப்  பொருள்கள் தவிர்த்து கூடுதலாக  ரம்ஜான்  மாதத்தை முன்னிட்டு  மற்ற அன்றாட தேவைகளான கோழி, மாட்டிறைச்சி, மீன், பல்வேறு கடல் உணவுகள், அரிசி மற்றும் கோழி முட்டை ஆகியவையும் விற்பனைக்கு வைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு பலகாரங்களைத்  தயாரிக்க தேவையான பொருட்களும் இங்கு விற்பனையும் உள்ளது. இந்த  ரம்ஜான் மலிவு விற்பனை  புத்ராஜெயாவில் ரமலான் மாதத்தின் முதல் நாளில்  உடனடியாக தொடங்கப்படும் என்று அவர் இன்று அருகிலுள்ள கினாருட்டில் ரஹ்மா மலிவு விற்பனையைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

மலேசிய மீன் வள மேம்பாட்டு வாரியம்  மற்றும் கூட்டரசு விவசாய சந்தை வாரியம் ( ஃபாமா)  ஆகியவற்றின் ஒத்துழைப்புடன்  மலிவு விற்பனைக்குத் தேவையானப்  பொருட்களை தமது அமைச்சு பெறுகிறது என்றார் அவர்.

நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் குறைந்தது இரண்டு  மலிவு விற்பனைகளை நடத்த  இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அந்தந்த இடங்களில் நடைபெறும் மலிவு  விற்பனைகளில் கலந்து கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.


Pengarang :