கூச்சிங், ஏப் 13- அருவியில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட வேகமான நீரோட்டத்தில் சிக்கி ஆடவர் ஒருவர் பலியான வேளையில் மற்றொருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இந்த துயரச் சம்பவம் கூச்சிங் நகரிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள செமந்தான் நகரின் கம்போங் செபாட்டில் நேற்று மாலை நிகழ்ந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 4.55 மணியளவில் பொது மக்களிடமிருந்து தாங்கள் புகாரைப் பெற்றதாக சரவா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை மையம் அறிக்கை ஒன்றில் கூறியது.
இதனைத் தொடர்ந்து லுண்டு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அது குறிப்பிட்டது.
இந்த காட்டாற்று வெள்ளத்தில் நான்கு ஆடவர்கள் பாதிக்கப் பட்டதாகவும் அவர்களில் இருவர் கிராம மக்களால் காப்பாற்றப்பட்டதாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது.
மேலும் ஒரு ஆடவரை பொது மக்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். எனினும், அவர் இறந்து விட்டது பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் மேலும் ஒருவரைக் காணவில்லை.
காணாமல் போன ஆடவரைத் தேடும் பணிகள் நேற்றிரவு 7.00 மணிக்கு நிறுத்தப்பட்டு இன்று காலை தொடரப்படும் என்று தீயணைப்புத் துறை கூறியது.