பண்டார் ஸ்ரீ டாமன்சாரா, ஏப்.13- இந்திய பெண் தொழில் முனைவோரின் உயர்வுக்கும், உருமாற்றத்திற்கும் ஒளிமயமான எதிர் காலத்திற்கும் வித்திடும் வகையில் அமானா இக்தியார் மலேசியா நிதியகத்தின் மூலம், ‘பெண்” எனும் புதுமை திட்டத்தின் வழி, மேலும் 5 கோடி ரிங்கிட் கூடுதல் நிதியை தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் அறிவித்தார்.
இந்த கூடுதல் நிதியைத் தொடர்ந்து, அமானா இக்தியார் மலேசியா (ஏ.ஐ.எம்) நிதியகத்தில் இந்திய பெண் தொழில் முனைவோருக்கு மட்டும் தற்போது 7 கோடியே 14 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு உள்ளதாகவும், ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் தொடங்கி 2 கோடியே 10 லட்சம் ரிங்கிட் பட்டுவாடா செய்யப்பட்டு விட்டதாகவும் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
“இக்கூடுதல் நிதியானது மலேசியா மடாணி கொள்கைக்கு ஏற்ப, ‘பெண்’ (வளப்பம், ஆளுமை, புதிய வழமை) எனும் புதிய திட்டத்தின் வழி வியாபாரக் கடனுதவியாக பகிர்ந்தளிக்கப்படும். இதன் வழி, இந்திய பெண் தொழில்முனைவோரை அடுத்த கட்ட வளர்ச்சிப் பாதைக்கு முன்னேற்ற முடியும். அவர்களின் சுய முன்னேற்றத்திற்கு வழிகோலும் இன்னொரு புதுமை முயற்சிதான் இது” என டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
இங்கு பண்டார் ஸ்ரீ டாமன்சாராவில் அமைந்துள்ள ஏ.ஐ.எம். தலைமையகத்தில் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அவர், பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.
இந்த வரலாற்றுப் பூர்வ கூடுதல் நிதி ஒதுக்கீடு அறிவிப்பு நிகழ்ச்சியில், ஏ.ஐ.எம். அறங்காலர் குழுத் தலைவர் டத்தோஸ்ரீ சைட் உசேன் சைட் ஜுனிட், ஏ.ஐ.எம். தலைமை நிர்வாகி ஷாமிர் அஸிஸ் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய தொழில்முனைவோர் (சஹாபாட் ஏ.ஐ.எம்) கலந்து கொண்டனர்.
ஏ.ஐ.எம்.-இன் உள் நிதியைக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ள இந்த 5 கோடி ரிங்கிட் கூடுதல் நிதி மூலம் கிட்டத்தட்ட 7,100 புதிய இந்திய பெண் தொழில் முனைவோரும், ஏற்கனவே சஹாபாட் ஏ.ஐ.எம்.-ஆக இருக்கின்ற 3,100 இந்திய பெண் தொழில் முனைவோரும் பயனடைவர் என எதிர்பார்க்கப் படுகின்ற நிலையில், ஆக மொத்தம் சுமார் 10,200 இந்திய பெண் தொழில் முனைவோருக்கு இந்த கூடுதல் நிதியானது அடுத்தக் கட்ட முன்னேற்றத்திற்கு வழிகோலும் என டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.
வருகின்ற ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கி நாடு முழுமையும் உள்ள 124 ஏ.ஐ.எம். கிளை அலுவலகங்களில், இச்சிறப்பு நிதி ஒதுக்கீட்டின் கீழ் 30 ஆயிரம் ரிங்கிட் வரைக்குமான வியாபாரக் கடனுதவிக்கு விண்ணப்பம் செய்யலாம். இதற்கான விதி முறையானது, விண்ணப்பத்தாரர் ஒரு மலேசியராகவும், இந்தியப் பெண்ணாகவும் இருக்க வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதனிடையே, ஏப்ரல் 14ஆம் தேதி ஞாயிறன்று சித்திரை புத்தாண்டை வரவேற்கும் மலேசிய இந்தியர்களுக்கு, இந்த நற்செய்தி மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது.
இதுவரை ஏ.ஐ.எம்.-இல் 3,100 இந்திய பெண் தொழில் முனைவோர்கள் பங்குப் பெற்றிருக்கின்றனர். அவர்களுக்கு 330.20 மில்லியன் ரிங்கிட் வியாபாரக் கடனுதவி பகிர்ந்தளிக்கப் பட்டுள்ளது.
கடந்த 37 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட ஏ.ஐ.எம் வழி, இதுவரை 968,321 தொழில்முனைவோர்களுக்கு 33.02 பில்லியன் நிதி கடனுதவியாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் வழி 3.87 மில்லியன் குடும்பங்களை ஏழ்மை நிலையில் இருந்து மீட்டெடுக்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டு (2024) கிட்டத்தட்ட 317,229 தொழில் முனைவோருக்கு உதவும் பொருட்டு 2.61 பில்லியன் ரிங்கிட் ஏ.ஐ.எம். கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது.