ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிறந்த மக்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் கடப்பாடு நமக்கும் உண்டு

ஷா ஆலம் ஏப்ர 18;- ஜசெக பிரதிநிதியான லீ கீ ஹியோங் புற்றுநோய் காரணமாக  கடந்த மார்ச் 21ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. 58 வயதான லீ,  கடந்த 2013 முதல்  மூன்று தவணைகளாக கோலக் குபு பாரு சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தார்.

இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்  ஏப்ரல் 27ஆம் தேதி நடக்கவுள்ளது.   தொடக்கக் கட்ட வாக்களிப்பு  மே 7 ஆம் தேதியும்  முழு வாக்குப்பதிவு மே 11ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

கலை கலாசார சுற்றுலாவை மேம்படுத்த பாடுபட்டவர்
கோலக் குபு பாரு சட்டமன்ற உறுப்பினராக ஜசெக வைச் சேர்ந்த லீ கீ ஹியோங் மூன்று தவணைகள் பணியாற்றிய போது, கோலக் குபு பாருவின் கலை கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு அப்பகுதியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டார்.

இதன் வாயிலாக அனைத்துலக நிலையில் பிரபலமடைவதற்குரிய வாய்ப்பு கோலக் குபு பாருவுக்குக் கிட்டியதோடு அந்தச் சிறிய நகரின் அழகை அதிகமானோர் கண்டு ரசிப்பதற்குரிய வாய்ப்பும் ஏற்பட்டது.

தீவிரமாகக் களப்பணியாற்றிய காலத்தில் லீ தேசியப் பாரம்பரியக் கலை, கலாசார மையமாகக் கோலக் குபு பாருவை அடையாளப்படுத்த  முயற்சிகளை முன்னெடுத்தார். தேசியக் கலாசாரப் பாரம்பரியப் பகுதியாக தற்போது அங்கீகாரம் பெற்றுள்ள அம்பாங் பிச்சா பள்ளிவாசல் போன்ற பல இடங்களை பிரபலப்படுத்துவது குறித்தும் அவர் பேச்சு நடத்தி வந்தார்.

கோலக் குபு பாருவில் செகு ஜூல்கர்னைன் என்ற புகைப்படக் கலைஞர் ஒருவர், இப்பகுதியில் உள்ள பறவைகளைப் புகைப்படம் எடுப்பதில், அலாதி ஆர்வம் கொண்டவர். இவரின் புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பை கோலக் குபு பாரு சேவை மையம் வெளியிட்டுள்ளது.

இது தவிர, கோலக்குபு பாருவின் வரலாற்று பெருமைகள் மற்றும் சிறப்புகள் குறித்து எழுத்துப் படிவங்களை வெளியிடும் நோக்கில் தேசிய இலக்கியவாதி விருதைப் பெற்ற ஷனோன் அகமது உட்படப் பல புகழ்பெற்ற எழுத்தாளர்களை அவர் கோலக் குபு பாருவிற்கு அழைத்திருந்தார்.
கோலக் குபு பாருவின் இயற்கை அழகு மற்றும் கலாசாரத்தைப் பாதுகாப்பதிலும் பிரபல படுத்துவதிலும் லீ காட்டி வந்த அக்கறையை இது பிரதிபலிக்கிறது.  அதே சமயம், உள்ளுர் கலாசார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையை வளர்க்கும் விதமாகவும் பல்வேறு கலை சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் அவர் ஏற்பாடு செய்தார்.
ஆலயத்திற்கு உதவி
கோலக் குபு பாருவில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய 5வது திருக்குட நன்னீராட்டு பெருவிழாவுக்கு  சட்டமன்ற உறுப்பினரான அமரர் லீ கீ  ஹியொங் ரி.ம. 10,000.00 வழங்கியுள்ளார். ஆண்டுதோறும்  சிலாங்கூர் மாநில அரசின்  நிதியுதவி  கிடைக்கவும் பெரும் உதவியாக இருந்தவர். இந்தத் திருப்பணிக்கு சிலாங்கூர் மாநில அரசு ரி.ம. 20,000.00 வழங்கியது போல் மடாணி அரசின் வீடமைப்பு ஊராட்சி மன்ற அமைச்சு ரி.ம. 127,000.00 வழங்கியது.
இக்கட்டான வேளைகளில் மக்கள் சவால்களைச் சமாளிப்பதில் அவர்களுக்கு உதவுவதில்  சிறந்த தோழராக விளங்கியவர்   அமரர் லீ கீ  ஹியொங்.கோலக் குபு பாரு சட்டமன்ற உறுப்பினராக முதலாவது தவணையில் பொறுப்பேற்ற பிறகு தனது தொகுதியில் தேசிய நிலையிலான புகைப்படப் போட்டியை லீ கீ ஹியோங் ஏற்பாடு செய்திருந்தார்.
இது தவிர, உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்துடன் இணைந்து அனைத்துலகக் கலை விழாவுக்கும் லீ ஏற்பாடு செய்திருந்தார். பல்வேறு  நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் கோலக் குபு பாருவில் ஒன்று கூடி இந்தச் சிறிய நகரின் அழகை தங்களின் கலைப்படைப்புகள் மூலம் பிரபலப்படுத்துவதற்குரிய வாய்ப்பு கிட்டியது.
லீ கீ ஹியோங் மற்றும் அவரின் குழுவினர் மூலம் மேற்கொள்ளப்பட்ட  முன்னெடுப்பு  கோலக் குபு பாரு நகர், அதிகமான மக்களின் கவனத்தை ஈர்பதை  உருவாக்கும் நோக்கமாகக் கொண்டிருந்தது.
கோவிட்- 19 – காலத்தில் உணவு உதவி
கோவிட்- 19 பெருந்தொற்று பரவலின் போது உணவுப் பற்றாக்குறையைப் பல குடும்பங்கள் எதிர்நோக்கிய நேரத்தில்.  உடனடியாக உணவு விநியோகம் செய்யும் பணியில் லீ மற்றும் அவரின் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
அக்காலக்கட்டத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்பாடு காரணமாகப் பல இளைஞர்கள் தங்கள் இல்லங்களுக்கு திரும்ப முடியாத நிலையில் இருந்தனர். இச்சூழலில் வீடுகளில் தனித்திருந்த வயதானவர்களை பராமரிக்கும் பொறுப்பை லீ ஏற்றுக் கொண்டார்.
தங்கள் பிள்ளைகள் வெகு தொலைவில் இருந்த நிலையில் மன கவலையில் இருந்த முதியவர்களுக்கு ஆதரவாகவும் ஆறுதலாகவும் இருப்பது மற்றும் அவர்களை மருத்துவச் சோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்வது போன்ற பணிகளை அவர் மேற்கொண்டார்.
லீ கீ ஹியோங்கின் வாழ்க்கை வரலாறு
மறைந்த லீ ஜோகூர் மாநில  மூவாரில் பிறந்தவர். கடந்த 1991ஆம் ஆண்டு பட்டப்படிப்பு முடித்த அவர், நிருபராக தனது பணியைத் தொடங்கினார். கடந்த 1993 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர் ஜசெக கட்சியில் இணைந்த அவர் லிம் கிட் சியாங்கின் சிறப்பு உதவியாளராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.
கடந்த 2008ஆம் ஆண்டு பாக்காத்தான் ராக்யாட் கூட்டணி சிலாங்கூரைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து செலாயாங் நகராண்மைக் கழக உறுப்பினராக லீ நியமிக்கப் பட்டார். 2013ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது கருப்பு  தொகுதி என வகைப்படுத்தப் பட்டிருந்த கோல குபு பாரு தொகுதியில் முதன் முறையாக போட்டியிட்டார்.
அந்த தேர்தலில் லீ தேசிய முன்னணி வேட்பாளர் மற்றும் மூன்று சுயேச்சைகளை 1,702 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்து கோல குபு பாரு  தொகுதியை ஜசெக வின் கோட்டையாக முதன் முறையாக உருவாக்கினார். அதன் பின்னர் 2018 மற்றும் 2023 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றிக் கனியைப் பறித்தார்

Pengarang :