பட்டர்வெர்த், ஜூன் 2- மோட்டார் சைக்கிள் மீது படுத்தவாறு அதிவேகத்தில் செலுத்தி ‘சூப்பர்மேன்‘ சாகசம் புரிந்த மூன்று இளைஞர்கள் போலீசாரிடம் வசமாகச் சிக்கினர். போலீசார் பட்டர்வெர்த், லிங்காரான் லுவார் எனப்படும் வெளிவட்ட நெடுஞ்சாலையில் பினாங்கு மாநில போலீசார் நேற்று முன்தினம் மேற்கொண்ட ‘ஓப் சம்சிங் ஜாலானான்‘ சோதனை இயக்கத்தின் போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த சோதனையின் போது கைது செய்யப்பட்ட 17 முதல் 21 வயது வரையிலான அந்த மூன்று இளைஞர்களும் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 42(1) பிரிவின் கீழ் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பினாங்கு காவல் துறை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவொன்றில் கூறியுள்ளது.
இந்த சோதனை நடவடிக்கையின் போது, மோட்டார் சைக்கிளோட்டிகள் கும்பல் ஒன்று தங்களுக்கும் பிற வாகனமோட்டிகளுக்கும் ஆபத்து ஏற்படும் வகையில் பந்தயத்தில் ஈடுபடுவது, மோட்டார் சைக்கிள் மீது படுத்தவாறு ‘சூப்பர்மேன்‘ சாகசம் புரிவது மற்றும் சாலையின் எதிர்த்தடத்தில் பயணிப்பது போன்ற அபாயகர செயல்களில் ஈடுபடுவதை காவல் துறையினர் கண்டனர் என அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாட் ரெம்பிட் அல்லது சாலை ரவுடிகளை இலக்காக கொண்ட இந்த சாலைத் தடுப்புச் சோதனையை பினாங்கு மாநில போலீஸ் தலைமையகத்தின் சாலை போக்குவரத்துப் பிரிவு பின்னிரவு 1.00 மணி தொடங்கி விடியற்காலை 6.00 மணி வரை மேற்கொண்டது.