செய்தி ;- ஆர்.ராஜா
சுபாங் ஜெயா, அக். 4- இங்குள்ள சீபீல்டு தமிழ்ப்பள்ளியில் பயிலும் வசதி குறைந்த இருபது மாணவர்களுக்கு மாநில அரசின் இலவச பேருந்துக் கட்டணம் வழங்கப்பட்டது. இன்று இப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ். பிரகாஷ் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களிடம் பேருந்துக் கட்டணத்தை ஒப்படைத்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரகாஷ், வசதி குறைந்த மாணவர்கள்
கல்வியைத் தொடர்வதில் பொருளாதாரச் சிக்கல் தடையாக இருந்து
விடக்கூடாது என்பதற்காக மாநில அரசு ஆண்டுக்கு 300 வெள்ளி உதவித் தொகையை உள்ளடக்கிய இந்த பேருந்துக் கட்டணத் திட்டத்தை அமல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பேருந்து கட்டண உதவித் திட்டத்தை சிலாங்கூர் மாநிலம் மட்டுமே அமல்படுத்தி வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த வசதியைப் பயன்படுத்தி பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் நாள் தவறாது பள்ளிக்கு வருவதை உறுதி செய்வர் எனத் தாம் நம்புவதாக கூறினார்.
குறைந்த வருமானம் பெறும் பி 40 தரப்பினர் என்ற நிலையிலிருந்து
இந்திய சமூகம் வெளியேறுவதற்கு கல்வி ஒன்றே பிரதான ஆயுதமாக
விளங்குவதால் தங்கள் பிள்ளைகளின் கல்வியில் பெற்றோர்கள் அதிக
கவனம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் சுமார் 3,000 பேர் கல்வியில் நாட்டமின்மை மற்றும் வேலைக்குச் செல்வதில் ஆர்வம் போன்ற காரணங்களால் படிப்பை பாதியில் கைவிடுவதாக அண்மையில் இந்தியத் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பின் போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இந்த நிலையை மாற்றுவது பெற்றோர்களின் கைகளில்தான் உள்ளது.
தங்கள் பிள்ளைகள் தினசரி குறைந்தது ஒரு மணி நேரத்தை கல்விக்கு
செலவிடுவதை பெற்றோர்கள் உறுதி செய்யும் அதே வேளையில்
அவர்கள் விரும்பிய துறைகளில் திறனை வளர்த்துக் கொள்வதற்கும்
உதவ வேண்டும் என்றார் அவர்.
தமிழ்ப்பள்ளிகளை பிரதான இலக்காகக் கொண்ட இந்த பேருந்துக் கட்டண உதவித் திட்டத்தை மாநில அரசு கடந்த 2009ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் இவ்வாண்டு மாநிலத்திலுள்ள 99 தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் 3,426 வசதி குறைந்த மாணவர்களுக்கு 10 லட்சத்து 27 ஆயிரத்து 800 வெள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.
இன்றைய நிகழ்வில் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி லதா
கணேசன், பள்ளி வாரியத் தலைவர் டாக்டர் ராமநாயுடு, கோத்தா
கெமுனிங் தொகுதி இந்திய சமூகத் தலைவர் எம்.கோபி, பெற்றோர்
ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் கதிரவன் முனியாண்டி ஆகியோர்
கலந்து கொண்டனர்.