MEDIA STATEMENTSELANGOR

தகுதிக்கேற்ப வேலை தேடாமல் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வீர்- இளைஞர்களுக்கு வீ.பாப்பாராய்டு அறிவுறுத்து

(ஆர்.ராஜா)

கிள்ளான், அக். 5- கல்வியை முடித்த இளைஞர்கள் தங்கள் கல்வித் தகுதிக்கேற்ற வேலையைத் தேடாமல் கிடைக்கும் வேலைவாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மனித வளம்  மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்  வீ.பாப்பா ராய்டு கேட்டுக் கொண்டார்.

ஆள்பலச் சந்தையில் கல்வி தகுதியை தாண்டி அனுபவம் மற்றும்  திறமைக்கும் முன்னுரிமை அளிக்கப்படுவதால் கல்வியை முடித்தவர்கள் முதலில் அனுபவத்தை பெறுவதில் முனைப்பு காட்ட வேண்டும் என அவர்  ஆலோசனை கூறினார்.

பல இளைஞர்கள் கல்வியை முடித்த பின்னர் எந்த வேலை அனுபவமும்
இல்லாத நிலையில் தங்களுக்கு ஏற்ற வேலைக்கு காத்திருப்பது
எங்களுக்கு கிடைத்த தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. கல்வியில்
சிறப்பான அடைவு நிலையை பெற்றவர்களைக் காட்டிலும் அனுபவம்
உள்ளவர்களுக்கு முதலாளிகள் அதிகம் சம்பளம் வழங்குகின்றனர்.

ஆகவே, பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளிடம் அதிக வாஞ்சை  காட்டாமல் கிடைக்கும் வேலையில் அவர்கள் சேர்வதை உறுதி செய்ய  வேண்டும். ஓரிரு ஆண்டுகளில் போதிய அனுபவமும் புதிய வேலைச்  சூழலுக்கு தங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ளும் ஆற்றலும் கிடைத்தப்  பின்னர் அவர்கள் தங்களுக்கு பிடித்த வேலையில் சேர முனைப்பு
காட்டலாம் என்றார் அவர்.

இன்று இங்குள்ள டேவான் ஹம்சாவில் நடைபெற்ற கிள்ளான் மாவட்ட நிலையிலான ஜெலாஜா ஜோப்கேர் கார்னிவல் வேலை வாய்ப்புச்  சந்தையை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்  இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பண்டாமாரான் சட்டமன்ற உறுப்பினர் டோனி லியோங்,
கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ், சமூக பாதுகாப்பு
நிறுவனத்தின் (சொக்சே) சிலாங்கூர் மாநில இயக்குநர் ஹாஜி இஸ்மாயில்
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இன்றைய இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் பங்கேற்றுள்ள 30 நிறுவனங்கள் 1,500 வெள்ளி முதல் 8,000 வெள்ளி வரையிலான சம்பளத்தில் 3,748 வேலை வாய்ப்புகளை வழங்குவதாக பாப்பா ராய்டு  கூறினார்.

இங்கு நடைபெற்று வரும் இந்த வேலை வாய்ப்புச் சந்தைக்கு
பங்கேற்பாளர்களிடமிருந்து கிடைத்து வரும் ஆதரவு வரவேற்க்கத்தக்க
வகையில் உள்ளது என்றார் அவர்.

மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் இதுவரை நடத்தப்பட்ட இத்தகைய
வேலை வாய்ப்புச் சந்தைகளின் வாயிலாக 466 பேருக்கு வேலை
கிடைத்துள்ளதாக க் கூறிய அவர், ஆண்டு இறுதிக்குள் கோல சிலாங்கூர்,
சிப்பாங் மற்றும் சபாக் பெர்ணம் ஆகிய மாவட்டங்களில் இந்நிகழ்வை
தாங்கள் நடத்தவுள்ளதாகச் சொன்னார்.


Pengarang :