புத்ராஜெயா, அக். 8 – பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு அழகுசாதன நிறுவன உரிமையாளரான கோடீஸ்வரர் சோசிலாவதி லாவியா மற்றும் அவரது மூன்று சகாக்களை கொலை செய்த வழக்கில் முன்னாள் வழக்கறிஞர் மற்றும் அவரின் பண்ணை உதவியாளருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை கூட்டரசு நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.
மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய கோரி
வழக்கறிஞர் என்.பத்மநாபன் (வயது 55) மற்றும் தி.தில்லையழகன் (வயது 33) ஆகியோர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு விண்ணப்பத்தை தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு நிராகரித்தது.
எங்கள் நீதித்துறை விவேகத்தைப் பயன்படுத்தியும் வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டும் இந்த முறையீட்டு மனுக்களை நிராகரிக்கிறோம். மரண தண்டனை நிலைநிறுத்தப்படுகிறது என்று நீதிபதி தெங்கு மைமுன் தீர்ப்பில் கூறினார்.
இதற்கிடையில், மற்றொரு முன்னாள் பண்ணை ஊழியரான ஆர். காத்தவராயன் ( வயது 44) மரண தண்டனையை மறுபரிசீலனை செய்வது தொடர்பான தனது விண்ணப்பத்தை வாபஸ் பெற்றார். பின்னர் நீதிபதிகள் குழுவும் அதனைத் தள்ளுபடி செய்தது. இதன்படி காத்தவராயனின் மரண தண்டனை நீடிக்கிறது.
2023ஆம் ஆண்டு கட்டாய மரண தண்டனை ஒழிப்புச் சட்டம்
கடந்தாண்டு ஜூலை 4 முதல் நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து மரண தண்டனையை சிறைத் தண்டனையாக மாற்றும் முயற்சியாக அவர்கள் இந்த மறுஆய்வு விண்ணப்பங்களை தாக்கல் செய்தனர்.
சோசிலாவதி, (வயது 47), வங்கி அதிகாரி நூர்ஹிஷாம் முகமது (வயது 38), அகமது கமில் அப்துல் கரீம் (வயது 32), சோசிலாவதியின் கார் ஓட்டுநர் கமாருடின் சம்சுடின் (வயது 44) ஆகியோரைக் கொலை செய்த வழக்கில் பத்மநாபன், தில்லையழகன், காத்தவராயன் ஆகியோருக்கு ஷா ஆலம் உயர் நீதிமன்றம் கடந்த 2013ஆம் ஆண்டு மே மாதம் தூக்குத் தண்டனை விதித்தது.
கடந்த 2010ஆம் ஆண்டு ஆகஸ்டு 30 ஆம் தேதி அன்று இரவு 8.30 மணி முதல் 9.45 மணி வரை பந்திங்கில் உள்ள லாட் 2001, ஜாலான் தஞ்சோங் லாயாங், தஞ்சோங் சிப்பாட் என்ற இடத்தில் இக்கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.
குற்றஞ்சாட்டப் பட்டவர்களின் மேல்முறையீடுகள் முறையே 2015 டிசம்பர் 4ஆம் தேதி மற்றும் 2017 மார்ச் 16ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் கூட்டரசு நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.