ஷா ஆலம், அக். 8- இம்மாதம் 26 ஆம் தேதி கிள்ளான், லிட்டில் இந்தியா, செட்டி பாடாங்கில் நடைபெறவிருக்கும் மாநில நிலையிலான தீபாவளி உபசரிப்பு நிகழ்வில் சுமார் 10,000 பேர் கலந்து சிறப்பிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாலை 6.00 மணிக்குத் தொடங்கும் இந்நிகழ்வில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சிறப்பு பிரமுகராக கலந்து கொள்வார் என்று மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு கூறினார்.
இந்நிகழ்வில் 5,000 முதல் 10,000 பேர் வரை கலந்து கொள்வர் என எதிர்பார்க்கிறோம். வார இறுதி விடுமுறை என்பதால் அதிகமானோர் இந்நிகழ்வில் பக்கேற்பதற்கு வாய்ப்பு உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
மாலை 6.00 மணி தொடங்கி இரவு 11.00 மணி வரை நடைபெறும் இந்நிகழ்வில் திரளாகக் கலந்து சிறப்பிக்குமாறு பொது மக்களை கேட்டுக் கொள்கிறோம் என அவர் சிலாங்கூர் கினியிடம் தெரிவித்தார்.
இந்த தீபாவளி கொண்டாட்ட நிகழ்வில் இந்திய கலை, கலாசார நிகழ்வுகளோடு அறுசுவை உணவுகளும் வழங்கப்படும் என அவர் சொன்னார்.
மேலும், இந்த நிகழ்வில் 300 பேருக்கு தீபாவளி ரொக்க அன்பளிப்பு வழங்கப்படும். இது தவிர, உயர்கல்வி மாணவர்களுக்கு உதவி நிதி மற்றும் தமிழ்ப் பள்ளிகளுக்கு மானியம் வழங்கும் அங்கமும் இடம் பெறும் என்றார் அவர்.
இவ்வாண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.