NATIONAL

பிட்காயின் மோசடிக் கும்பலிடம் ஆடவர் வெ.130,000 இழந்தார் – வங்கிக் கணக்கின் உரிமையாளர் கைது

பாலிக் பூலாவ், அக். 9- பிட்காயின் முதலீட்டு மோசடிக் கும்பலிடம்
தனது வங்கி கணக்கை வழங்கியவர் என சந்தேகிக்கப்படும் ஆடவரை
போலீசார் நேற்று கைது செய்தனர்.

மொத்தம் 129,970 வெள்ளியை உட்படுத்திய போலி முதலீட்டு மோசடி
தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு 36 வயதுடைய அந்த
ஆடவரை பாராட் டாயா மாவட்ட காவல் துறையின் வர்த்தக
குற்றப்புலனாய்வுத் துறை கைது செய்துள்ளதாக பாராட் டாயா மாவட்
போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் கமாருள் ரிஸால் ஜெனால்
கூறினார்.

அந்த போலி முதலீட்டு மோசடிக் கும்பலிடம் ஏமாற்றப்பட்டது தொடர்பில்
பாயான் பாருவைப் சேர்ந்த 44 வயது ஆடவர் ஒருவர் போலீசில் செய்த
புகாரைத் தொடர்ந்து அந்த சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டதாக
அவர் தெரிவித்தார்.

இந்த பிட்காயின் திட்டத்தின் வாயிலாக ஆண்டுக்கு 200 விழுக்காட்டு
லாபத்தை பெற முடியும் என்று அக்கும்பல் வாக்குறுதியளித்ததாகவும்
எனினும், வாக்குறுதியளித்தப்படி லாபம் கிடைக்கவில்லை என்றும் அந்த
ஆடவர் தனது புகாரில் கூறியுள்ளார் என்றார் அவர்.

இவ்வாண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி முதல் ஆகஸ்டு 10ஆம் தேதி
வரையிலான காலக்கட்டத்தில் கைதான நபர் உள்பட பல்வேறு
நபர்களுக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகளில் அந்த ஆடவர் பணத்தை
செலுத்தியுள்ளார். அவர் செலுத்திய தொகையின் மொத்த மதிப்பு 129,970
வெள்ளியாகும் என கமாருள் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

கைதான அந்த ஆடவர் குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ்
விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என அவர் மேலும்
சொன்னார்.


Pengarang :