(ஆர்.ராஜா)
பலாக்கோங், அக். 9- உயர் கல்வியைத் தொடர்வதில் பொருளாதார சிக்கலை எதிர்நோக்கியிருந்த சஞ்சய் குமார் சக்ரபர்த்தி எனும் இளைஞரின் கல்லூரி கட்டண பாக்கியைச் செலுத்தி அவரின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுத்துள்ளார் பலாக்கோங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வேய்ன் ஓங் சுன் வேய்.
செராஸ், தாமான் செராஸ் பெர்டானாவைச் சேர்ந்தவர் சஞ்சய் குமார் சக்ரபர்த்தி த/பெ பிரிதாம் குமார் சக்ரபர்த்தி (வயது 18). இவரின் தந்தை காலமான நிலையில் தாயார் நிர்மணி மாலா சிறு விபத்து காரணமாக வேலையை இழந்தார்.
இச்சூழலில் தனியார் கல்லூரியில் ‘ஆட்டோமோட்டிவ் இஞ்ஜினியரிங்’ துறையில் படித்துக் கொண்டிருந்த சஞ்சய் குமாரால் கல்லூரி கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை. இதனால் இவரின் கல்வி தடைபட்டது. இவர்களின் நிலையைக் கேள்வியுற்று அண்மையில் இவர்கள் வீட்டிற்கு ஓங் சுன் வேய் நேரில் வருகை புரிந்தார்.
சஞ்சய் குமார் மேற்கல்வியை தொடர்வதற்கான ஏற்பாடுகள் செய்வதாக வாக்குறுதி அளித்தார். இதன் அடிப்படையில் நேற்று கார்சம் அகாடமிக் கல்லூரிக்கு நேரில் வருகை புரிந்த ஓங் சுன் வேய் இந்த மாணவர் செலுத்த வேண்டிய கட்டணம் முழுவதையும் செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து சஞ்சய் குமார் இம்மாத இறுதியில் இக்கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்வார்.
தனது மகன் மேற்கல்வி தொடர்வதற்கு தக்க நேரத்தில் உதவி புரிந்த ஓங் சுன் வேய்க்கு சஞ்சய் குமாரின் தாயார் மாலினி நன்றி தெரிவித்துக் கொண்டார். கார்சம் அகாடமிக் கல்லூரிக்கு ஓங் சுன் வேய்யுடன் கவுன்சிலர் எட்வின் தாங், சஞ்சய் குமார் மற்றும் அவரின் தாயார் ஆகியோர் சென்றனர்.