மலாக்கா, அக். 9 – இவ்வாண்டு ஜனவரி மாதம் சமூக ஊடகங்களில் தனிநபர் ஒருவருக்கு எதிராக அவதூறான கருத்துக்களைப் பதிவிட்டதாக முன்னாள் பத்திரிகையாளர் ஒருவருக்கு எதிராக ஆயர் குரோவில் உள்ள இரு நீதிமன்றங்களில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
முகமது ஜுஹைரி ஹுசேன் (வயது 43) என்ற ஆடவரின் உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கில் “அஸபெலேலா ஜிஸா தோராக்” எனும் முகநூல் கணக்கின் மூலம் அவதாறான கருத்துகளைப் பதிவிட்டதாக பகுதிநேர புகைப்படக் கலைஞரான நூர்பதேஹா ஓத்மான் (வயது 42) என்ற அந்த ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இவ்வாண்டு ஜனவரி மாதம் பிற்பகல் 2.00 மணியளவில் மலாக்கா தெங்கா மாவட்டத்தின் புக்கிட் கட்டிலில் உள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 50,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது அதிகபட்சமாக ஒரு வருடம் சிறை மற்றும் ஒவ்வொரு குற்றத்திற்கும் மேலும் 1,000 வெள்ளி அபராதம் விதிப்பதற்கு வகை செய்யும் 1998ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233(1) வது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
இதற்கிடையில், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவியல் சட்டத்தின் 509வது பிரிவின் கீழ் அவருக்கு எதிராக மற்றொரு குற்றச்சாட்டும் கொண்டு வரப்பட்டது.
அதே இடத்தில், அதே நேரத்தில் ஜூஹைரியில் படங்கள், அவரது விவரங்கள் மற்றும் வாட்ஸ்அப் உரையாடல்களை முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்ததன் மூலம் அவரது தன்மானத்திற்கு இழுக்கை ஏற்படுத்தியதாக அக்குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.
இச்சட்டப் பியிவின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.