SELANGOR

பழைய குழாய்களை மாற்றும் பணி திட்டமிட்டபடி நடைபெறுகிறது- இஷாம் ஹஷிம் தகவல்

ஷா ஆலம், அக். 9- சிலாங்கூர் மாநிலம் முழுவதும் உள்ள பழைய நீர்க்
குழாய்களை மாற்றும் பணி திட்டமிட்டப்படி நடைபெற்று வரும்
நிலையில் ஆண்டுக்கு 300 கிலோ மீட்டர் என்ற புதிய குழாய்களைப்
பதிக்கும் இலக்கும் ஏறக்குறைய அடையப்பட்டு வருகிறது.

இக்குழாய்களைப் பொருத்தும் பணியை மேற்கொண்டு வரும்
பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்திடமிருந்து இது தொடர்பான
சமீபத்திய அறிக்கைக்காக தாங்கள் காத்திருப்பதாக அடிப்படை வசதிகள்
மற்றும் விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம்
கூறினார்.

பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் செலவிலான இந்த குழாய்
மாற்றும் பணிகளை ஆண்டுக்கு 150 கிலோ மீட்டரிலிருந்து 300 கிலோ
மீட்டராக அதிகரிக்க மாநில அரசு முடிவெடுத்துள்ளதாக அவர் சொன்னார்.

குழாய்களை மாற்றும் பணி சரியான இலக்கை அடைந்துள்ளது அதாவது
ஆண்டுக்கு 300 கிலோ மீட்டர் அளவுக்கு மேற்கொள்ளப்படுவது ஆயர்
சிலாங்கூர் நிறுவனத்துடன் அண்மையில் நடத்தப்பட்ட சந்திப்பில்
வெளியிடப்பட்ட தரவுகள் காட்டுகின்றன என்று அவர் தெரிவித்தார்.

மாநிலத்தில் பழைய குழாய்களைப் மாற்றும் பணி இவ்வாண்டு தொடங்கி
150 கிலோ மீட்டரிலிருந்து 300 கிலோ மீட்டராகவும் வரும் 2034ஆம்
ஆண்டு 400 கிலோ மீட்டராகவும் உயர்த்தப்படும் என்று மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அண்மையில் கூறியிருந்தார்.

பொது மக்களின் நலன் கருதி கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இது வரை
600 கிலோ மீட்டர் தொலைவுக்கு பழைய குழாய்களை மாநில அரசு
மாற்றியுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

குடிநீர்க் கட்டண உயர்வினால் ஏற்பட்ட தாக்கத்தை சமாளிக்க மாநில
அரசு எடுத்து வரும் முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து
மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.


Pengarang :