வியந்தியான், அக் 10 – மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டு, இரு நாடுகளுக்கு இடையே நிலுவையில் உள்ள சில பிரச்சனைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
44வது மற்றும் 45 வது ஆசியான் உச்சி மாநாடுகள் மற்றும் தொடர்புடைய உச்சி மாநாடுகளை முன்னிட்டு நேற்று சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்குடன் நடந்த இருதரப்பு சந்திப்பில் இந்த விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
நிலுவையில் உள்ள சிக்கல்களைக் குறிப்பிடாமல், இந்த ஆண்டின் இறுதியில் சிங்கப்பூர்-மலேசியா தலைவர்களின் வருடாந்திர சந்திப்பில் அவை மேலும் விவாதிக்கப்படும் என்று அன்வார் கூறினார்.
“கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் நாங்கள் இரு நாடுகளின் நலன்கள் தொடர்பான பல விஷயங்களை விவாதித்தோம். குறிப்பாக பிரச்சனைகளை திறம்பட மற்றும் கூடிய விரைவில் தீர்க்க சிறந்த வழியை ஆராய்வது பற்றி ஆகும்,” என்று அவர் கூறினார்.
இச்சந்திப்பிற்குப் பிறகு, அவரும் வோங்கும் இரு நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இருதரப்பு சந்திப்பை நடத்தியதாக அன்வார் மேலும் கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையே நிலுவையில் உள்ள பிரச்சனைகளில் வான்வெளி கட்டுப்பாடு, நீர் பிரச்சனைகள் மற்றும் கடல் எல்லை ஆகியவை அடங்கும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது.
44வது மற்றும் 45 வது ஆசியான் உச்சி மாநாடுகள் மற்றும் தொடர்புடைய உச்சி மாநாடுகள் நேற்று அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டு நாளை வரை நடைபெறும்.
ஆசியான் தலைமை பொறுப்பை மலேசியாவிடம் லாவோஸ் ஒப்படைக்கும்.ஜனவரி 1, 2025 அன்று மலேசியா அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்கும்.
– பெர்னாமா