கோலாலம்பூர், அக். 13- உடலாரோக்கியத்தை தொடர்ந்து பேணிக்
காப்பதற்கு ஏதுவாக விளையாட்டில் ஆர்வம் காட்டும்படி மலேசியர்களை
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
விளையாட்டில் ஆர்வம் காட்டுவதன் மூலம் குடும்ப மற்றும் சமூக
உறவுகளை வலுப்படுத்தவும் இயலும் என்று அவர் தனது பேஸ்புக்
பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் கூறியுள்ளார்.
இவ்வாண்டு தேசிய விளையாட்டுத் தின நிகழ்வு வெகு சிறப்பாகவும்
உற்சாக உணர்வுடனும் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
சுறுசுறுப்பான வாழக்கை முறையைக் கடைபிடிப்பதற்கும் தீவிர
விளையாட்டு தேசமாக நாடு மாறுவதற்கும் ஏதுவாக விளையாட்டுக்
கலாசாரத்தை தொடர்ந்து கடைபிடிக்கும் படி நாட்டு மக்களைக் கேட்டுக்
கொள்கிறேன்.
2024 தேசிய விளையாட்டுத் தின வாழ்த்துக்கள் என அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாண்டு தேசிய விளையாட்டுத் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள 45 லட்சம் பேர் பல்வேறு விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் பங்கு கொண்டதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா யோ முன்னதாக கூறியிருந்தார்.
நாட்டை விளையாட்டு தேசமாக மாற்றுவதற்கு ஏதுவாக தீவிர மற்றும்
ஆரோக்கிய வாழ்க்கை முறையை அமல்படுத்துவதன் மூலம்
விளையாட்டை கலாச்சாரமாகவும் மக்கள் மயமாகவும் ஆக்கும் நோக்கில்
தேசிய விளையாட்டுத் தினத்தை அரசாங்கம் கடந்த 2015ஆம் ஆண்டு
அறிமுகப்படுத்தியது.