ALAM SEKITAR & CUACANATIONAL

கெடா, ஜோகூர், பேராக்கில் வெள்ளப் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

கோலாலம்பூர், அக் 13- நாட்டின் மூன்று மாநிலங்களில் வெள்ளத்தில்
பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. கெடா,
ஜோகூர் மற்றும் பேராக்கில் வெள்ள பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்களின்
எண்ணிக்கையும் உயர்வு கண்டுள்ளது.
கெடா மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பாலிங் மாவட்டத்தில்
மூன்று தற்காலிக நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ள வேளையில் சிக்
மாவட்டத்தில் மேலும் இரு மையங்கள் செயல்பட்டு வருகின்றன என்று
மலேசிய பொது தற்காப்பு படையின் கெடா மாநில துணை இயக்குநர்
மேஜர் முகமது சுஹைமி முகமது ஜைன் கூறினார்.
பாலிங் மாவட்டத்தில் 26 குடும்பங்களைச் சேர்ந்த 69 பேரும் சிக்
மாவட்டத்தில் 54 பேரும் துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம்
நாடியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான எண்ணிக்கையைக்
கண்டறிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது என்று அவர்
குறிப்பிட்டார்.
கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் 372 குடும்பங்களைச் சேர்ந்த 1,238 பேரும்
பெண்டாங்கில் 139 குடும்பங்களைச் சேர்ந்த 372 பேரும் குபாங் பாசு
மாவட்டத்தில் 52 குடும்பங்களைச் சேர்ந்த 146 பேரும் பொக்கோ செனா
மாவட்டத்தில் 36 குடும்பங்களைச் சேர்ந்த 98 பேரும் நிவாரண
மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்.
ஜோகூர் மாநிலத்தில் குளுவாங் மற்றும் கூலாயில் தலா ஒரு வெள்ள
நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ள வேளையில் வெள்ளத்தில்
பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் 147 பேராக உயர்வு கண்டுள்ளது.
பத்து பஹாட் மாவட்டத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மூன்று
குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் ஸ்ரீ பெனுட் தேசிய பள்ளியில் தங்க
வைக்கப்பட்டுள்ளனர்.
குளுவாங், கம்போங் தேசியப் பள்ளியில் 61 பேரும் எஞ்சியோர் கூலாய்,
கம்போங் மூர்னி ஜெயா மண்டபத்திலும் தங்கியுள்ளனர்.
பேராக் மாநிலத்தில் நேற்றிரவு 40 குடும்பங்களைச் சேர்ந்த 136 பேராக
இருந்த வெள்ள அகதிகள் எண்ணிக்கை இன்று காலை 51 குடும்பங்களைச்
சேர்ந்த 166 பேராக உயர்வு கண்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை
செயல்குழுவின் செயலகம் தெரிவித்தது.

Pengarang :