(ஆர்.ராஜா)
அம்பாங், அக்.13- தெராத்தாய் தொகுதி இந்திய சமூகத் தலைவர்
கே. சரஸ்வதி ஏற்பாட்டில் நேற்று நடைபெற்ற சேலை கட்டும் மற்றும் மடிக்கும் பயிற்சியில் 23 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
பாலாய் ராயா கம்போங் செராஸ் பாருவில் நடைபெற்ற பயிற்சியை அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக உறுப்பினர் ஆர். மோகன்ராஜ் தொடக்கி வைத்தார்.
இந்தப் பயிற்சியில் பங்கு கொண்டவர்களில் அறுவர் சீனப்பெண்கள் என்று சரஸ்வதி
கூறினார். புடவையின் தனித்துவம் அதை உடுத்துவதில் காணப்படும் நளினத்தால் ஈர்க்கப்பட்டு சேலை கட்டும் பயிற்சியில் சீனப்பெண்கள் பங்கு கொண்டதாக சரஸ்வதி சொன்னார்.
சேலை உடுத்துவதன் மூலம் நமது கலாசாரத்தை கட்டிக் காக்க வேண்டியதன் அவசியம் குறித்து இந்த பயிற்சியில் எடுத்துரைக்கப்பட்டதோடு சேலையை எளிதாக உடுத்துவது தொடர்பான நுட்பங்களும் பங்கேற்பாளர்களுக்கு கற்றுத்தரப்பட்டதாக அவர் சொன்னார்.
இந்த பயிற்சியில் பங்கேற்ற மகளிர் சேலை கட்டும் பயிற்சிகளை நடத்துவதன் மூலமாகவும் பிறருக்கு சேலையை உடுத்தி விடுவதன் வாயிலாகவும் உபரி வருமானம் ஈட்ட முடியும் என்று அவர் தெரிவித்தார்.