கோலாலம்பூர், நவ.6 – அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் மலேசியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு வலுவாக இருக்கும் என்று மலேசியாவுக்கான அமெரிக்க தூதர் எட்கார்ட் டி.ககன் தெரிவித்தார்.
வெள்ளை மாளிகையில் யார், எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இருநாட்டு உறவுகள் எப்போதும் வலுவாகவே உள்ளன.
உறவுகளின் அடித்தளம் அடிப்படையில் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். அது தொடரும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறினார்.
இன்று இங்கு அமெரிக்க தேர்தல் முடிவுகள் தொடர்பான கண்காணிப்பு நிகழ்வின் போது “2025 ஆம் ஆண்டில் ஆசியான் தலைவர் பதவியை நாடு ஏற்கவுள்ள நிலையில் தேர்தல் முடிவுகள் மலேசியாவை எவ்வாறு பாதிக்கும்”என்ற நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அமெரிக்காவும் மலேசியாவும் 65 ஆண்டுகளுக்கும் மேலாக வலுவான அரசதந்திர உறவுகளை அனுபவித்து வருகின்றன. புதிய அதிபர் வந்தால் கொள்கைகள் மாறலாம். ஆனால், இருதரப்பு உறவுகள் அடிப்படையில் அப்படியே இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். இது அமெரிக்காவின் ஆழமான மற்றும் இருதரப்பு அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றார் அவர்.
ரஷ்யாவுடனான உறவுகளை கட்டுப்படுத்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் விடுத்த வேண்டுகோளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சமீபத்தில் நிராகரித்தது குறித்தும் ககனிடம் கேட்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து விளக்கமளிப்பதைத் தவிர்த்த அவர், மலேசியாவின் இறையாண்மை மற்றும் வெளிநாட்டு உறவுகளை சுதந்திரமாக நடத்துவதற்கான உரிமையை அமெரிக்கா ஒப்புக்கொண்டதாக கூறினார்.
எங்கள் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த அமெரிக்கா பொருத்தமான மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இரு நாடுகளும் ஒன்று மற்றொன்றின் முக்கிய நலன்களை மதிக்கும் அதே வேளையில் ஒன்றாக வேலை செய்வதற்கான பொதுவான தளத்தைக் கண்டறியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.