ஷா ஆலம், நவ. 6 – மாநிலத்தின் சாலை மேலாண்மை நிறுவனமான இன்ஃப்ராசெல் சென். பெர்ஹாட் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 25,125 இடங்களில் காணப்பட்ட சாலை பழுதுகளைச் சரி செய்தது.
இன்ஃப்ராசெல் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட சுய ஆய்வு முடிவுகள் மற்றும் 259 பேரின் புகார்களின் அடிப்படையில் சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சாலைகள் ஊராட்சி மன்றங்கள் அல்லது பொதுப்பணித் துறையின் அதிகாரத்தின் கீழ் அல்லாமல் இன்ஃப்ராசெல் நிறுவனத்தின் பணி வரம்பிற்கு உட்பட்டது என்று அடையாளம் காணப்பட்டால் பழுதுபார்க்கும் பணி மேற்கொள்ளப்படும்.
இந்த விவேக சொத்து மேலாண்மை முறை சாலைகள் எப்போதும் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான முன்னெடுப்பாகும் என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
பொது மக்கள் #INFRASEL #RoadName #Regional என்ற ஹேஷ்டேக்குடன் எக்ஸ் தளத்தில் இடுகையிடுவதன் மூலம் சாலை பழுது தொடர்பான புகார்களை அளிக்கலாம் என்று இன்ஃப்ராசெல் கூறியது.
இந்த ஆண்டு மெகா 2.0 சாலை புனரமைப்புத் திட்டத்தை செயல்படுத்த 2 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக அடிப்படை வசதி துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் முன்னதாகக் கூறியிருந்தார்.