ஷா ஆலம், நவ 7: வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட மொத்தம் 170 நபர்கள் கடந்த அக்டோபர் மாதம் வரை சொத்து மற்றும் தாவர இழப்பு உதவி (BKHT) திட்டத்தின் மூலம் பலன்களைப் பெற்றுள்ளனர்.
இதற்கு 608,000 ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தனிநபர்களும் ஒரே நேரத்தில் நிதி உதவி பெற்றதாக இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹுவாங் தியோங் சிய் கூறினார்.
“10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டின் மூலம் வனவிலங்கு தாக்குதல்களாகல் ஏற்படும் பிரச்சனைக்கு உதவியை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. வனவிலங்கு தாக்குதல்களால் சொத்து இழப்பு ஏற்பட்ட மக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒரு முறை உதவி வழங்கப்படுகிறது.
“கடந்த அக்டோபர் வரை, 170 விண்ணப்பதாரர்களுக்கு சொத்து மற்றும் தாவர இழப்பு திட்டத்தின் கீழ் மொத்தம் RM608,000 பணம் வழங்கப்பட்டது,” என்று அவர் இன்று மக்களவையில் ஜெலி நாடாளுமன்ற உறுப்பினர் சாஹாரி கெசிக்கின் கூடுதல் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
வனவிலங்குகளால் காயமடைந்தவர்கள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களுக்கு, அமானா குழு நிதியத்தின் மூலம் உதவி வழங்கப்படும்.
வன விலங்குகளை விரட்ட முயற்சிப்பது அல்லது அணுகுவது, பொருட்களை வீசி எறிவது, கொல்வது போன்ற செயல்களை செய்ய வேண்டாம் என்று அவர் சமூகத்திற்கு அறிவுறுத்தினார்.
“வனவிலங்குகள் தொடர்புடைய சம்பவங்களை புகாரளிக்க பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள வனவிலங்குத் துறை அல்லது ஹாட்லைன் 1800-88-515 ஐத் தொடர்பு கொள்ளலாம். மேலும், மலேசியா காவல்துறையின் பொது அவசர எண்ணுக்கு அழைக்கலாம்,” என்று அவர் கூறினார்.