NATIONAL

விரைவுப் பேருந்துகளில் மின்சார சாக்கெட்டுகளைப் பயன்படுத்த தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது

ஷா ஆலம், நவ. 7: கடந்த வாரம் பினாங்கில் மின்சாரம் தாக்கி வாலிபர் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, விரைவுப் பேருந்துகளில் மின்சார சாக்கெட்டுகளைப் பயன்படுத்துவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

நிலப் பொதுப் போக்குவரத்து நிறுவனம் (Apad) வழங்கிய அறிவுறுத்தல்கள், சம்பவம் குறித்த முழு அறிக்கை கிடைக்கும் வரை, சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுப்பது நோக்கமாகக் கொண்டது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

“சிறப்புக் குழுவினால் முழுமையான அறிக்கை தயாரிக்கப்படும்.அவர்களுக்கு உண்மையான காரணத்தை அறிய 14 நாட்கள் அவகாசம் அளித்தேன்.இது விரிவாக அறிவிக்கப்படும்.

“இதற்கிடையில், மின்சார சாக்கெட்டுகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதற்கு முன்பு அமைச்சகம் நிலையான இயக்க நடைமுறைகளை (SOP) மேம்படுத்தி செயல்படுத்தும்,” என்று அவர் இன்று மக்களவை அமர்வில் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த லோக், விமானங்கள் மற்றும் ரயில்களுக்கு அமைக்கப்பட்டுள்ளபடி பேருந்துகளில் சாக்கெட்டுகளைப் பயன்படுத்துவது குறித்து குறிப்பிட்ட தரநிலைகள் எதுவும் இல்லை என்பதை ஒப்புக்கொண்டார்.

“விமானங்கள் அல்லது ரயில்களில் உள்ள சாக்கெட்டுகளுக்கு தரநிலைகள் உள்ளன. ஆனால் பேருந்துகளுக்கு தனி தரநிலை இல்லை.

வெள்ளிக்கிழமை, பினாங்கு சென்ட்ரல் பேருந்து நிலையத்தில் நடந்த  சம்பவத்தில், 18 வயதான முகமட் நூர் அசிமாவி ஜஸ்மாதி, எக்ஸ்பிரஸ் பேருந்து சாக்கெட்டில் தனது கைப்பேசியை சார்ஜ் செய்யும் போது மின்சாரம் தாக்கியதில் இடது கை மின்சாரா தாக்குதலினால் பாதிக்கப்பட்டு  உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து, விரிவான விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட பேருந்தின் இயக்கத்தை இடைநிறுத்தியதுடன், நிலப் பொதுப் போக்குவரத்து நிறுவனம், சாலைப் போக்குவரத்துத் துறை மற்றும் மலேசிய சாலை பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட பல அமைப்புகளைக்  கொண்ட சிறப்பு புலன் விசாரணை குழுவை அமைச்சகம் அமைத்தது.


Pengarang :