NATIONAL

போலீஸ்காரர்கள் போல் ஆள்மாறாட்டம் செய்து கொள்ளை – 10 பேர் கைது

பெட்டாலிங் ஜெயா, நவ. 7- சிலாங்கூரிலுள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளில் போலீஸ்காரர்கள் போல் ஆள்மாறாட்டம் செய்து மோட்டார் சைக்கிளோட்டிகளிடம் கொள்ளையடித்து அவர்களின் வாகனங்கள் பறித்துச் செல்லும் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் கருதப்படும் 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இருபத்தைந்து முதல் 39 வயதுக்குட்பட்ட  வாகனங்களைப் பறிமுதல் செய்வோர், பொருள் பட்டுவாடா பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்பர்கள் உள்ளிட்ட அக்கும்பல் உறுப்பினர்கள் அனைவரும் கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு பெட்டாலிங் ஜெயாவில் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் துணை காவல்துறைத் தலைவர் டத்தோ எஸ் சசிகலா தேவி கூறினார்.

இரண்டு மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி போலீஸ் அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்யும் இக்கும்பல் இரவு முதல் அதிகாலை வரை தங்கள் கைவரிசையைக் காட்டி வந்துள்ளது என்று அவர் சொன்னார்.

இன்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற  செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விபரங்களை  வெளியிட்டார்.

பாதிக்கப்பட்டவர்களை நிறுத்தி அவர்களிடம் சோதனை செய்வது போல் பாவனை செய்து பின்னர்  அவர்களின் உடைமைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை  பறித்துக் கொண்டு தப்பியோடுவது இக்கும்பலின் பாணியாகும் என்றார் அவர்.

இக்கும்பல் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதன் விளைவாக ஏழு மோட்டார் சைக்கிள்களை போலீசார் கைப்பற்றியதாக அவர் கூறினார்.  கைதான 10 நபர்களில் எழுவர்  26 முந்தைய குற்றப் பதிவுகளையும் 10 போதைப்பொருள் தொடர்பான குற்றப் பதிவுகளையும் கொண்டிருப்பது தொடக்கக்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்று சசிகலா தேவி கூறினார்.

இக்கும்பல் கைது செய்யப்பட்டதன் மூலம் சிலாங்கூர் மாநிலத்தில் நிகழ்ந்த 10 கொள்ளைச் சம்பவங்களுக்குத்  தீர்வு காண முடியும் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர் சொன்னார்.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 395/170 இன் கீழ் மேல் விசாரணைக்காக அவர்கள் அனைவரும் சுங்கை பூலோ மாவட்ட காவல்துறைத் தலைமையகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Pengarang :