NATIONAL

ஃபேஷன் வாலே நிறுவன உரிமையாளர்களின் சொத்துகளை எம்.ஏ.சி.சி. முடக்கியது

புத்ராஜெயா, நவ 7 – ஃபேஷன் வாலே  இ-காமர்ஸ் தளத்தின் நிறுவனர்களுக்குச் சொந்தமான சுமார் 11 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பல தனிநபர் மற்றும் நிறுவன வங்கிக் கணக்குகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.)  முடக்கியுள்ளது.

கஸானா நேஷனல் பெர்ஹாட் மற்றும் பெர்மோடலான் நேஷனல் பெர்ஹாட் (பிஎன்பி) நிறுவனங்களின் முதலீட்டுத் தொகையான 4.39 கோடி வெள்ளி  இழப்பு தொடர்பில்  தம்பதியர்  மீது எம்ஏசிசி மேற்கொண்டு வரும்  விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சொத்து  முடக்கம் அமைந்துள்ளது.

கடந்த திங்கள் கிழமை  ஃபேஷன் வாலே சென் பெர்ஹாட்,  நிதி அமைச்சு, கஸானா நேஷனல், பி.என்.பி.அலுவலகங்களில் எம்.ஏ.சி.சி. ஏககாலத்தில்  சோதனை நடத்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த ‘ஓப் பேவேஷ்’ சோதனை நடவடிக்கையின் வழி விசாரணைக்கு  உதவுவதற்காக, சுமார் 11 தனிப்பட்ட  வங்கிக் கணக்குகள் மற்றும் தம்பதியரின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஆறு நிறுவன கணக்குகளோடு 11 லட்சம் வெள்ளியையும் எம் ஏ சி.சி. முடக்கியுள்ளது.

மேலும், ஃபேஷன் வாலே சென் பெர்ஹாட்,  நிதி அமைச்சு, கஸானா நேஷனல், பி.என்.பி.யின்   மூத்த அதிகாரிகள், கணக்காளர்கள், நிறுவன மதிப்பீட்டாளர்கள் மற்றும் அறிமுகம் உள்ளவர்கள் உட்பட பல முக்கிய நபர்களிடமிருந்து வாக்குமூலங்களை எம் ஏ.சி.சி. பதிவு செய்துள்ளது என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது.

மேலும்,  கோலாலம்பூர்,  மோண்ட் கியாராவில் உள்ள தம்பதியினரின் இல்லத்தையும் ஊழல் தடுப்பு ஆணையம் நேற்று சோதனை செய்தது.


Pengarang :