கோல சிலாங்கூர், நவ 9 -இம்மாதம் 15ஆம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும் 2025ஆம் ஆண்டு சிலாங்கூர் வரவு செலவுத் திட்டம் மாநிலத்தில் உணவுப் பாதுகாப்பு மையத்தை உருவாக்கும் முயற்சிகளில் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உணவு விநியோகம் தொடர்ச்சியாக இருப்பதை உறுதி செய்வதற்கு ஏதுவாக உயர்தர விவசாயப் பயிர்களை உற்பத்தி செய்வது, கால் நடைகளை இனப்பெருக்கம் செய்வது ஆகிய விஷயங்களில் கவனம் செலுத்தப்படும் என்று உள்கட்டமைப்பு மற்றும் விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.
நமது தேசிய உணவுப் பாதுகாப்புக்கு கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என நாங்கள் (மாநிலம்) நம்பும் உயர் தொழில்நுட்ப கால்நடை வளர்ப்பு செயல்முறைகள் மற்றும் பயிர் நடவை மேம்படுத்துவதற்குரிய வாய்ப்பினை பட்ஜெட் வழங்கும் என நாங்கள் நம்புகிறோம்.
கூடுதலாக, கோல சிலாங்கூரில் உணவு விநியோகக் மையத்தின் மேம்பாட்டில் கவனம் செலுத்தப்படும். அத்தகைய முயற்சியை செயல்படுத்தும் முதல் மாநிலமாக சிலாங்கூரை மாற்றுவோம். இதுதான் எங்களின் எதிர்பார்ப்பாகும் என்று அவர் தெரிவித்தார்.
நேற்று பெஸ்தாரி ஜெயா, ஜாலான் ரந்தாவ் பஞ்சாங்கில் மூல நீர் உத்தரவாதத் திட்டத்தின் தொகுப்பு பி ஒப்படைப்பு நிகழ்வில் பங்கேற்றப் பின்னர் இஷாம் செய்தியாளர்களிடம் பேசினார்.
இதற்கிடையில், மாநில அரசின் ஏஹ்சான் ரஹ்மா திட்டம் அடுத்த ஆண்டு தொடரும் வேளையில் இதர மாவட்டங்களில் அதிக ஏஹ்சான் மார்ட் விற்பனை நிலையங்களை திறக்கவும் தாங்கள் திட்டமிட்டுள்ளதாக இஷாம் கூறினார்.
கடந்த செப்டம்பர் மாதம் சுங்கை துவாவில் எஹ்சான் மார்ட் விற்பனை மையம் திறக்கப் பட்டதை சுட்டிக் காட்டிய அவர், இத்தகைய விற்பனை மையங்களை அமைப்பதன் மூலம் வாகனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் நடமாடும் ஏஹ்சான் விற்பனை கட்டங் கட்டமாக குறைக்கப்படும் என்றார்.