புத்ராஜெயா, நவ. 9 – இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு அமல்படுத்தப்பட்ட பண்டிகைக் கால உச்சவரம்பு விலைத் திட்டம் (எஸ் எச்.எம்.எம்.பி.) சுமூகமாக அமல்படுத்தப்பட்டதோடு நடைமுறைப்படுத்தப்பட்ட அதிகபட்ச விலை வழிகாட்டுதல்களைப் பெரும்பாலான வர்த்தகர்கள் பின்பற்றினர்.
இக்காலகட்டத்தில் நாடு முழுவதும் 61 தயாரிப்பு மற்றும் மொத்த விற்பனை வளாகங்கள் மற்றும் 3,826 சில்லறை விற்பனை நிலையங்களை உட்படுத்திய . 3,887 சோதனைகள் நடத்தப்பட்டதாக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் அமலாக்கத் துறை தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் ஆடாம் கூறினார்.
இதன் விளைவாக 66 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,870.50 வெள்ளி மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு மொத்தம் 7,100 வெள்ளி அபராதமும விதிக்கப்பட்டது. அவர்களில் 65 வர்த்தகர்கள் நிர்ணயிக்கப்பட்ட இளஞ்சிவப்பு விலைக் குறியீட்டை பயன்படுத்தத் தவறியது கண்டுபடிக்கப்பட்டது. உச்சவரம்பு விலைக்கு மேல் விற்பனை செய்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது என அவர் சொன்னார்.
தீபாவளி 2024 உச்சவரம்பு விலை அமலாக்க காலத்தில் அமைச்சுக்கு எந்தப் புகாரும் வரவில்லை எனக்கூறிய அவர், பெரும்பாலான வர்த்தகர்கள் உச்சவரம்பு விலை விதிமுறைகளை முறையாகப் பின்பற்றினர் என்றார்.
இந்தத் திட்டத்தை வெற்றியடையச் செய்வதில் ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை வழங்கிய தொழில்துறையினர் மற்றும் வர்த்தகர்களுக்கு அமைச்சின் சார்பாக பாராட்டுகளை அவர் தெரிவித்துக் கொண்டார்.
கடந்த அக்டோபர் 31 அன்று தீபாவளியை முன்னிட்டு வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த உச்சவரம்பு விலைத் திட்டம் கடந்த அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரை அமல்படுத்தப்பட்டது. இந்த கட்டுப்படுத்தப் பட்ட உச்சவரம்பு விலைப் பட்டியலில் எட்டு வகையான பொருட்கள் இருந்தன.