ஷா ஆலம், நவ. 9- இவ்வாண்டு ஜூலை மாத தொடக்கத்தில் தொடங்கிய ஷா ஆலம் விளையாட்டரங்கை இடிக்கும் பணி 80 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ள நிலையில் அடுத்தாண்டு மே மாதத்திற்குள் அப்பணி முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரங்கை இடிக்கும் பணி முடிவடைந்ததும் 76.08 ஹெக்டர் பரப்பளவில் புதிய ஷா ஆலம் விளையாட்டு வளாகத்தின் (கே.எஸ்.எஸ் ஏ.) கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்று விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.
பழைய அரங்கை இடிக்கும் பணி நல்ல முன்னேற்றத்தில் உள்ளது. இப்பணி நிறைவடைந்ததும் புதிய அரங்கின் கட்டுமானம் தொடங்கும். அனைத்து செயல்முறைகளும் நிர்ணயிக்கப்பட்ட அட்டவணையின்படி நடக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். கே.எஸ்.எஸ்.ஏ. பல்வேறு நவீன வசதிகளைக் கொண்டிருக்கும். அவை விளையாட்டு நடவடிக்கைகளுக்கு மட்டுமின்றி, பொதுமக்களுக்கான பொழுதுபோக்குக்கு மையமாகவும் விளங்கும் என முகமது நஜ்வான் ஹலிமி கூறினார்.
பெட்டாலிங் மாவட்ட நிலையிலான சிலாங்கூர் மடாணி இளைஞர் சுற்றுப்பயணத் திட்டத்தை இன்று தொடக்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
ஷா ஆலம் விளையாட்டரங்கை பழுதுபார்ப்பதற்கு 78.7 கோடி வெள்ளி செலவாகும் என மதிப்பிடப்பட்டதைத் தொடர்ந்து புதிய அரங்கை மறுவடிவமைப்பு செய்ய முடிவெடுக்கப்பட்டது.
கடந்த 2013 மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கு இடையில் அரங்கின் சேதத்தை சரி செய்யவும் பராமரிக்கவும் மொத்தம் 5.6 கோடி வெள்ளி செலவிடப்பட்டது.