அங்காரா, நவ. 9- வட சிரியாவில் உள்ள அலெப்போ மற்றும் இட்லிப் உட்பட பல இராணுவ நிலைகள் மீது இஸ்ரேலிய இராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக சிரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனத்தை (சானா) மேற்கோள் காட்டி அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 12.45 மணியளவில் இத்தாக்குதல் நடந்ததாக சானா செய்தி நிறுவனம் தெரிவித்தது. இட்லிப் மற்றும் அலெப்போவின் கிராமப்புறங்களில் பல இடங்கள் இஸ்ரேலியப் படைகளால் தாக்கப்பட்டன.
அலெப்போவின் ஷிஃபிர் மாவட்டமும் குறிவைக்கப்பட்டதாகவும் இதனால் கணிசமான அளவு சேதமும் பல வீரர்களுக்கு காயமும் ஏற்பட்டதாகவும் சிரிய இராணுவ வட்டாரம் தெரிவித்தது.
இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. எனினும், கடந்த 2011ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் வெடித்ததிலிருந்து சிரியாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்கின்றன.
ஈரானிய ஆதரவு குழுக்கள் மற்றும் சிரிய இராணுவ நிலைகளை இஸ்ரேல் தொடர்ந்து குறிவைக்கிறது.
லெபனான் மற்றும் சிரியாவுக்கு எதிரான இஸ்ரேலின் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளை அந்த பிராந்தியத்தில் நிலவி வரும் பதட்டத்தை பிரதிபலிக்கின்றன.